search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜனதா: ஜே.பி. நட்டாவுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை
    X

    மத்திய பிரதேசத்தில் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜனதா: ஜே.பி. நட்டாவுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை

    • தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது.
    • தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது

    போபால்:

    230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த மாதம் 17-ந்தேதி 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா வெளியிட்டு அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.

    பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரசும் தயாராகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டு காலமே நீடித்தது. 2020-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது.

    இதையடுத்து சிவராஜ் சிங் சவுதான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. தொடர்ந்து அக்கட்சி ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதியஜனதா உள்ளது.

    அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் மலர வைப்பதில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கு பலனாக சமீபத்தில் பல பாரதியஜனதா தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மறுபடியும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான ராஜேஷ் குப்தா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் சில தலைவர்கள் விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பாரதியஜனதா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், பாரதிய ஜனதா வெற்றிக்காக பாடுபடுவது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×