என் மலர்
இந்தியா

அரசியல் தரவுகளைத் திருடவே ED சோதனை: அமித்ஷா மீது மம்தா நேரடி தாக்கு!
- பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்
- புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்"
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது. கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார் .
சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர்.
மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சோதனையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
அமலாக்கத்துறையின் இந்த சோதனை பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உள்ளார். அங்கிருந்து அமலாக்கத்துறை எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துக் கொள்கிறார்கள். சோதனையின்போது அங்கு காவலர்கள் யாரும் இல்லை. ஒரு பக்கம் SIR என்ற பெயரில் பெயர்கள் நீக்கப்படுகின்றன, மறுபுறம் அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல், கட்சியின் வியூகம் மற்றும் கட்சியின் திட்டங்களைச் சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா? நானும் அதேபோல பா.ஜ.க அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் பா.ஜ.க-விற்குத் துணிவிருந்தால் தன்னை அரசியல் ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்" என்றும் அவர் சாடினார். மேலும் "பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் எங்களுடன் மோதி தோற்கடிக்கப் பாருங்கள். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், தரவுகளை திருடுகிறீர்கள். இதையெல்லாம் செய்வதால், உங்களிடம் இருக்கும் இடங்களையும் இழப்பீர்கள்." என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.






