என் மலர்
இந்தியா

ஏசி காற்றில் உறங்கிய மருத்துவர்.. குழந்தையுடன் கெஞ்சிய பெண் - சிகிச்சையின்றி நோயாளி பலி - வைரல் வீடியோ
- சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.
- பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூற்றுப்படி, மீரட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் சுனில் குமார் என்ற நபர் படுகாயமடைந்தார். சுனில் குமாரை அவரது உறவினர்கள் உள்ளூர் லாலா லஜ்பத் ராய் நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை ஸ்ட்ரெச்சரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு டாக்டர் பூபேஷ் ராய், ஏசியை ஆன் செய்து நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். சுனில் குமாரின் மனைவி மருத்துவரிடம் சென்று அவரை எழுப்ப முயன்றார்.
சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.
பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர் பூபேஷ் தூங்குவதையும், சுனில் குமாரின் மனைவி கெஞ்சுவதையும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரலானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் டாக்டர் பூபேஷ் ராய் இடைநீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.






