என் மலர்
இந்தியா

த.வெ.க. தலைவர் விஜயிடம் நடத்திய சி.பி.ஐ. விசாரணை நிறைவு
- டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார்.
- குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அஜஸ் ரத்தோகி கண்காணிப்பில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விஜய்க்கும் சம்மன் அனுப்பி அவரிடமும் கடந்த 12-ந்தேதி அன்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் ஆஜரான விஜய்யிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் 6 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
அவரிடம் அடுத்த நாளும் (அதாவது, 13-ந்தேதி) விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகை காரணமாக விஜய் தரப்பில் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றும்படி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனையேற்று, பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் சம்மன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்காக விஜய் ஆஜரான நிலையில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம், சிஜிஓ காம்பிளக்ஸ் சாலையில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்? என கேள்வி எழுப்பியது.
சாலையில் வளைவுகள் நிறைய இருந்ததால் கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. எழுப்பி உள்ளது.
இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காலையில் இருந்து விஜயிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக நடந்த சிபிஐ விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






