என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது- நாளை பட்ஜெட் தாக்கல்
    X

    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது- நாளை பட்ஜெட் தாக்கல்

    • கடந்த மாதம் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடந்தது.
    • பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் 7 கட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடந்தது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த ஜூன் 9-ந் தேதி, 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 71 மத்திய மந்திரிகளும் பதவியேற்றனர்.

    கடந்த மாதம் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நடந்தது. புதிய எம்.பி.க்கள் 2 நாட்களாக பதவியேற்றுக்கொண்டனர். இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்கிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) அவர் நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் வர இருந்ததால், கடந்த பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்தார்.

    முழுமையான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இது, அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும்.

    பட்ஜெட் கூட்டத்தொடர், ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடக்கிறது. அதாவது, 19 அமர்வுகள் நடக்கிறது. மத்திய அரசு 6 மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. 90 ஆண்டுகள் பழமையான விமான சட்டத்துக்கு மாற்றான மசோதாவும் அவற்றில் அடங்கும். ஜனாதிபதி ஆட்சி நடக்கும் காஷ்மீருக்கான பட்ஜெட்டுக்கு பாராளுமன்ற ஒப்புதலையும் மத்திய அரசு கோர உள்ளது.

    நீட் தேர்வு முறைகேடுகள், ரெயில் விபத்துகள், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    Next Story
    ×