என் மலர்tooltip icon

    இந்தியா

    கடும் அமளி காரணமாக  மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு
    X

    கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

    • மக்களவையில் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் எழுப்பப்பட்டது.
    • மாநிலங்களவையில் பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    தி.மு.க. எம்.பி. வில்சன் மாநிலங்களவை செயலாளரிடம் கடிதம் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் அவர், "மாநிலங்களவையில் இன்று நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ள நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    எனவே சட்டவிதி 267-ன்கீழ் அனைத்து அலு வல்க ளையும் ரத்து செய்து தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்க அளிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது. இதை வலியுறுத்தி தி.மு.க. எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள்.

    அப்போது மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் மத ரீதியிலான இட ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் இடம் ஒதுக்கீடு அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. மத ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. கர்நாடகா காங்கிரஸ் கட்சி சட்டத்துக்கு எதிராக நடந்து வருகிறது.

    கர்நாடகா மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அரசியல் சாசனத்தை மாற்ற நினைக்கிறார். தங்கள் கட்சிக்கு சாதகமாக இட ஒதுக்கீட்டை செய்ய இருப்பது சரியானது அல்ல. இதை காங்கிரஸ் தலைவர் கார்கே ஏற்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்," என்றார்.

    ஜே.பி.நட்டா பேசியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் கார்கே பேசும் போது, "நட்டாவின் பேச்சுகளை ஏற்க இயலாது. இஸ்லாமியர்களுக்கு நன்மை தரும் இட ஒதுக்கீட்டை யாராலும் அகற்றி விட முடியாது," என்று கூறினார்.

    இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்குரல் கொடுத்தனர். இதனால் மாநிலங்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    பாராளுமன்ற மக்களவை இன்று 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் சிக்கியது பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

    அப்போது சமாஜ்வாடி எம்.பி.க்கள் எழுந்து உத்தர பிரதேசத்தில் கொலை-கொள்ளை அதிகரித்து விட்டது. அதுபற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்தார். உடனே சமாஜ்வாடி எம்.பி.க்கள் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பிடித்தனர்.

    இதை கண்டதும் சபாநாயகர் ஓம்பிர்லா கோபம் அடைந்தார். இப்படி நடந்து கொண்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து மக்களவையில் கடும் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    Next Story
    ×