search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் நிதிஷ்குமார்
    X

    ராகுல் காந்தியை சந்தித்த நிதிஷ்குமார்

    டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார் நிதிஷ்குமார்

    • பீகார் முதல் மந்திரி டெல்லிக்கு இன்று வருகை தந்தார்.
    • இந்தப் பயணத்தின் போது ராகுல் காந்தியை அவர் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அவர் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே, மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களில் 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், டெல்லி சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறினார்.

    இந்நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் 3 நாள் பயணமாக இன்று டெல்லி வருகை தந்தார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சந்தித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×