என் மலர்
இந்தியா

பெங்களூரு விவகாரம்.. பினராயி விஜயனை எச்சரித்த டி.கே.சிவகுமார்!
- 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
- பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.
பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவின் எலஹங்கா பகுதியில் உள்ள கோகிலு லேஅவுட், பக்கீர் காலனி மற்றும் வசீம் லேஅவுட் ஆகிய பகுதிகளில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், "வட இந்தியாவில் கடைபிடிக்கப்படும் புல்டோசர் கலாச்சாரம் இப்போது தென்னிந்தியாவிலும், அதுவும் காங்கிரஸ் ஆட்சியில் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல்" என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் கள நிலவரம் தெரியாமல் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூருவின் உள்விவகாரங்களில் அவர் தலையிட வேண்டாம்.
இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் குப்பை கிடங்கு மற்றும் கல் குவாரி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டவை. அந்த இடம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றது மற்றும் சுகாதார சீர்கேடு நிறைந்தது.
நில மாஃபியாக்கள் இது போன்ற குடிசைப்பகுதிகளை உருவாக்கி அரசு நிலத்தை ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்கள். பெங்களூருவை மும்பை போல குடிசை நகரமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேரளாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற பினராயி விஜயன் அரசியல் நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த நடவடிக்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் தகுதியுள்ளவர்களுக்கு ராஜீவ் காந்தி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாற்று இடங்கள் வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.






