search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆலுவா அருகே தீவிரவாத தடுப்பு படையினர் சோதனை: 4 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது
    X

    ஆலுவா அருகே தீவிரவாத தடுப்பு படையினர் சோதனை: 4 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×