என் மலர்
இந்தியா

அனைத்து வீடுகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர்: வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால்
- டெல்லியில் கடந்த முறை நடந்த சட்டசபைத் தேர்தலில் ௬௨ இடங்களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியை தக்கவைத்தது.
- மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்தார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது. அடுத்து, 2020-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை தவிர்த்து, டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும், மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிமுகம் செய்தது.
அப்போது பேசிய கெஜ்ரிவால், தற்போது ராஜேந்திர நகர் பகுதியில் 24 மணி நேரமும் தடையின்றி தண்ணீர் வழங்கப்படுகிறது. விரைவில் இந்தத் திட்டம் டெல்லி முழுமையும் செயல்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.






