search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன்: சித்தராமையா

    நான் எப்போதும் சமூகநீதிக்காக குரல் கொடுப்பேன் என்றும், பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்றும் சித்தராமையா கூறினார்.
    பெங்களூரு :

    ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா தாலுகாவில் காகினெலே கனக குருபீடத்தில் ஹாலுமத கலாசார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு, பேசும்போது கூறியதாவது:-

    நான் முதல்-மந்திரியாக இருந்த போது கனகதாசரின் 500-வது ஜெயந்தி விழாவை நடத்தினேன். இதனால் மாநிலத்தில் குருப சமூக மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். அதன் பிறகே கனகபீடம் அமைக்கப்பட்டது. இன்று எனக்கு எதிராக சிலர் தவறான பிரசாரம் செய்கிறார்கள். பீதர், கலபுரகி, யாதகிரி மற்றும் குடகு மாவட்டங்களில் குருப சமூகத்தினரை ஒன்றுபடுத்தி பழங்குடியின பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசுக்கு 2 முறை பரிந்துரை செய்தேன்.

    5 ஆண்டுகளாக அந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்று இந்த கோரிக்கைக்காக போராடுபவர்கள், அன்று அதுபற்றி பேசினரா?. ஒரு சமூகத்தின் விவரங்கள், அவர்கள் பின்பற்றும் கலாசாரங்கள் அடிப்படையில் அந்த சமூகம் பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்படுகிறது. அந்த கலாசாரங்களை சேகரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் பழங்குடியின பட்டியலில் குருப சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும்.

    இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களே இன்று எனக்கு பாடம் கற்பிக்க முயற்சி செய்கிறார்கள். பழங்குடியின பட்டியலில் குருப சமூகத்தை சேர்ப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் முறைப்படி இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டியது அவசியம். நான் எப்போதும் ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல் செய்தவன் கிடையாது. பிரதமர் பதவி கொடுத்தாலும் நான் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் எப்போதும் சமூகநீதிக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்.

    அரசியலில் யாருக்கும் நான் பயப்பட்டது கிடையாது. நான் உப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மக்களை திரட்டி மாநாடு நடத்தினேன். அப்போது தேவேகவுடா, மாநாடு நடத்த வேண்டாம். இல்லாவிட்டால் நீங்கள் மந்திரி பதவியை இழப்பீர்கள் என்று எச்சரித்தார். அதை நான் பொருட்படுத்தாமல் மக்களுக்காக அந்த மாநாட்டை நடத்தினேன். அதனால் என்னை ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு நீக்கினர். நான் இதுவரை சுயமரியாதையுடன் வாழ்ந்து வருகிறேன். உங்களின் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. நடிகர் ராஜ்குமார் கூறியது போல், நீ்ங்களே எனது கடவுள்.

    இவ்வாறு சித்தராமையா பேசினார்.
    Next Story
    ×