search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து தொழிற்சாலைகள், வியாபார ஸ்தலங்கள், கட்டுமான பணி உள்ளிட்ட தொழிற்துறைகள் அனைத்தும் முடங்கின.

    இதனால் வேலைகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுக்காக மத்திய அரசு ரெயில்களை இயக்கியது. பலர் நடந்தே தங்களது ஊர்களுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதுவரை 4 முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள்.

    இந்தநிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து திரும்பும் தொழிலாளர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும். இதற்காக மாவட்ட, மண்டலம் வாரியாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    அதேபோல் சொந்த மாநிலங்களில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். சொந்த மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு புறப்படும் தொழிலாளர்களை சோதனை செய்து அவர்களுக்கு முககவசம், சானிடைசர், சோப்புகளை வழங்கவேண்டும்.

    மத்திய அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தி கண்காணிப்பதை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    Next Story
    ×