search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஊரடங்கு நீடிப்பது குறித்து டாக்டர்கள் குழு அறிக்கைபடி பிரதமர் முடிவு- நாளை அறிவிப்பு வெளியாகலாம்

    பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை ஊரடங்கு குறித்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பிரதமர் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிகிறது. ஆனாலும் நோய் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

    இதுசம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

    சமுதாய நோய் பரவல் தடுப்பு நிபுணர் டாக்டர் டி.சி.எஸ். ரெட்டி உள்ளிட்டவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். நோய் கண்டறிதல் நிபுணர்கள், வைராலஜிஸ்டுகள், தொற்று நோய் தடுப்பு நிபுணர்கள் ஆகியோரும் இதில் இடம் பெற்றிக்கிறார்கள்.

    எய்ம்ஸ், உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகளும் இதில் இருக்கிறார்கள். அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

    ஊரடங்கை தளர்த்தலாமா? என்பது குறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.

    இந்த வாரம் இறுதியில் (நாளை) அறிக்கை அளிக்கப்படும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    இதுசம்பந்தமாக அந்த குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் கூறும்போது, நாங்கள் மருத்துவ ரீதியாக மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசனை வழங்குவோம். இதனுடன் பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளையும் ஆராய்ந்து மத்திய அரசு உரிய முடிவுகளை எடுக்கும் என்று கூறினார்.

    மேலும் மருத்துவ குழுவினர் நோய் பாதிப்பு ரீதியாக 4 மண்டலமாக பிரித்துள்ளனர். அதாவது 10 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் 5 பேருக்கும் குறைவாக நோயாளிகள் இருந்து கடந்த ஒரு வாரமாக நோய் பரவுதல் முற்றிலும் இல்லை என்றால் அது 1-வது மண்டலமாகவும், 10 லட்சம் மக்களில் ஒருவருக்கு மட்டுமே நோய் இருந்தால் அது 2-வது மண்டலமாகவும், 10 லட்சம் மக்களில் 1-லிருந்து 2 பேருக்கு நோய் இருந்தால் அது 3-வது மண்டலமாகவும், 10 லட்சம் பேரில் 2-க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய் இருந்தால் அது 4-வது மண்டலமாகவும் பிரிக்கப்படுகிறது.

    இதில் 1-வது மண்டலத்தில் மட்டும் ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்த குழு சிபாரிசு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    3-வது, 4-வது மண்டலங்களுக்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்க சிபாரிசு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல 2-வது மண்டலத்திற்கு ஓரளவு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் சிபாரிசு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் நாளை முடிவுகளை எடுத்து ஊரடங்கு தொடர்பாக அறிவிக்க உள்ளார்.
    Next Story
    ×