என் மலர்
செய்திகள்

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.
குமாரசாமி ராஜினாமாவை வலியுறுத்தி கர்நாடகா முழுவதும் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்
ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக தீர்மானித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.
இந்நிலையில், அம்மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது மந்திரி பதவிகளை இன்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.
இதனால், 14 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் பெரும்பான்மை பலத்தை இழந்த குமாரசாமியால் முதல் மந்திரியாக நீடிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆட்சியில் நீடிப்பதற்கான பலத்தை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாளை கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கர்நாடக மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா இன்றிரவு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்குள் இருந்த பூசல்கள் மோதலாக வெடித்து விட்டதால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி இனியும் முதல் மந்திரி பதவியில் நீடிக்க கூடாது.
எனவே, நமது மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு, குமாரசாமி உடனடியாக முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என எடியூரப்பா குறிப்பிட்டுள்ளார்.
Next Story






