search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங். தலைவர்- விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு
    X

    மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங். தலைவர்- விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு

    கேரளாவில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசு அனுப்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏ.பி. அப்துல்லா குட்டி. இவர், கடந்த 1999 முதல் 2004 வரை கண்ணூர் தொகுதி எம்.பி. யாக இருந்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அப்துல்லா குட்டி, பாரதீய ஜனதா கட்சியையும், பிரதமர் மோடி யையும் அடிக்கடி பாராட்டி வந்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பிரதமர் மோடியே காரணம்.

    காந்திய கொள்கைகளை முன் எடுத்து செல்வதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மத்திய அரசு கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உஜ்வாலா திட்டம் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கிய திட்டமும் மக்களின் பாராட்டை பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா யாரும் எதிர் பார்க்காத வெற்றியை பெற்றது. இதனை எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, பாரதீய ஜனதா கட்சியில் உள்ளவர்களே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்.

    காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு பாரதீய ஜனதா கட்சியை பாராட்டியதும், பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதும் கேரள காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


    இது தொடர்பாக அவர்கள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர். கட்சி மேலிடத்தின் கவனத்திற்கும் இதனை கொண்டு சென்றனர். இதையடுத்து கட்சி மேலிடம் அப்துல்லா குட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. இதனை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மோடியை புகழ்ந்ததால் இப்போது சிக்கலில் சிக்கி உள்ள அப்துல்லா குட்டி ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். 2009-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகொண்டு அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை பாராட்டி பேசினார்.

    இதற்காக கடந்த 2009-ம் ஆண்டே அப்துல்லா குட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது இங்கும் அதே சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

    Next Story
    ×