search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்
    X

    காசி விசுவநாதர் கோவிலில் மோடி வழிபாடு- வாரணாசியில் விழாகோலம்

    பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு இன்று வாரணாசி தொகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

    இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.

    பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.

    முதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.


    மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசி விசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்.

    காசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்பு வழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன் கைப்பட அபிஷேகம் செய்த அவர் தீபாராதனையும் காட்டி வழிபட்டார்.


    இதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார்.

    பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
    Next Story
    ×