என் மலர்
செய்திகள்

மோடி, அமித்ஷா விதிமுறை மீறல் - தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் வழக்கு
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் பலமுறை தேர்தல் கமிஷனில் புகார் அளித்து இருந்தது.
ஆனால் தேர்தல் கமிஷன் காங்கிரசின் இந்த புகார்களை நிராகரித்து தள்ளுபடி செய்தது. மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த நிலையில் மோடி, அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக இன்று முறையிட்டது.
அசாம் மாநிலம் சில்சார் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதாதேவ் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

அமித்ஷா பேசிய அதே விஷயத்தை மற்றொரு நபர் பேசி இருக்கிறார். ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதே சமயம் அமித்ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ஒருதலைபட்சமாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எம். சிங்கி ஆஜரானார். அப்போது மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
அப்போது ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 8-ந்தேதி விசாரிக்கிறது. #PMModi #Amitshah






