என் மலர்
செய்திகள்

அமேதி தொகுதி வாக்காளர்களுக்கு ராகுல் திடீர் கடிதம்
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
வயநாடு தொகுதியில் கடந்த மாதம் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. அமேதி தொகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எளிதான வெற்றி கிடைக்காது என்று நேற்று தகவல்கள் வெளியானது. அமேதி தொகுதி மக்கள் ராகுல் மீது அதிருப்தி அடைந்து இருப்பதாகவும் எனவே அவருக்கு இந்த தடவை வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ராகுல் காந்தி கடந்த 5 ஆண்டுகளில் சில தடவை மட்டுமே அமேதிக்கு வந்ததாக அந்த தொகுதி மக்கள் புகார் சொல்கிறார்கள். மேலும் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு போட்டியிட சென்றதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்றும் அந்த தொகுதி மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் அமேதி தொகுதி வாக்காளர்களுக்கு ராகுல் நேற்று திடீரென கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் சென்று சேரும் வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனுப்பி வருகிறார்கள். “அமேதி என் குடும்பம்” என்று தலைப்பிட்டு மிக உருக்கமாக எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அமேதி தொகுதி என் குடும்பம் ஆகும். இந்த தொகுதியில் உள்ள ஒவ்வொருவரையும் நான் எனது குடும்ப உறுப்பினராக கருதுகிறேன்.
அமேதி மக்கள் கொடுத்த அன்பின் அடிப்படையில் தான் நான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். இதன் மூலம் நாட்டின் அனைத்து திசைகளையும் ஒற்றுமைப்படுத்த முயல்கிறேன்.
அமேதி மக்களின் உண்மை, நேர்மை, எளிமையில்தான் அவர்களது பலம் அடங்கி இருப்பதாக நான் கருதுகிறேன். உங்களது துணிச்சலால்தான் நானும் உண்மையை கடைபிடித்து வருகிறேன். எனவே வரும் தேர்தலில் எனக்கு அதிக அளவில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
தற்போது நாட்டில் 2 விதமான சித்தாந்தங்கள் உள்ளன.
1. தொழில் அதிபர்களுக்காகவே பாரதிய ஜனதா செயல்படுகிறது.
2. ஏழை-எளியவர்களுக்காக காங்கிரஸ் கட்சி வேலை செய்கிறது. இந்த சித்தாந்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அமேதி தொகுதியில் ஏராளமான நலத்திட்டங்கள் தொடங்க நான் நடவடிக்கை எடுத்து இருந்தேன். அந்த திட்டங்கள் அனைத்தையும் பா.ஜனதா அரசு முடக்கி வைத்துள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த தடைகள் அனைத்தும் உடைக்கப்படும். அமேதி தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் எழுதி உள்ளார். #RahulGandhi






