search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்தார்: ராகுல் குற்றச்சாட்டு
    X

    புல்வாமா வீரர்கள் கொல்லப்பட்ட போது மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்தார்: ராகுல் குற்றச்சாட்டு

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    திருப்பதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆந்திர மாநிலம், திருப்பதி நகரில் இன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    தலைமைக்கான தகுதிகளில் முக்கியமான தகுதி கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது என்னும் குறிப்புடன் எனது பேச்சை தொடங்குகிறேன். அவ்வகையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது என மத்திய அரசு அளித்திருந்த அந்த வாக்குறுதியை மத்தியில் அமையப்போகும் காங்கிரஸ் அரசு நிச்சயமாக நிறைவேற்றும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாங்கள் இந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறோமா, இல்லையா? என்பது முக்கியமில்லை. ஆனால், இந்த நாட்டின் பிரதமரால் முன்னர் அளிக்கப்பட்ட வாக்குறுதியும் வெளியிடப்பட்ட அறிவிப்பும் இந்த நாட்டில் உள்ள நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதியாக பார்க்க வேண்டும்.

    ஒரு பிரதமர் பேசுகிறார் என்றால் அந்த நாடே பேசுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும். எனவே, மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் பலமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

    ‏மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், விவசாயிகளின் அனுமதியின்றி அவர்களின் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என்னும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.

    ஆந்திராவுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற நிறைவேறாத பொய் வாக்குறுதிகளை நாங்கள் அளிக்க மாட்டோம். விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை, மேக் இன் இந்தியா, ஸ்டிராட் அப் இந்தியா என பொய்மேல் பொய்யாக நாங்கள் சொல்ல மாட்டோம்.

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் கொல்லப்பட்ட மூன்றரை மணி நேரத்துக்குள் தனது வாழ்க்கை வரலாறு படத்துக்காக மோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். ஆனால், மத்தியபிரசேதம், சத்திஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நாங்கள் ஆட்சி அமைத்த இரண்டே நாட்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். 

    அதேபோல், ஆந்திர மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்புக்காக நிச்சயமாக சிறப்பு மாநில அந்தஸ்தை நாங்கள் அளித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Modiposedcameras #RahulGandhi #Modiposed
    Next Story
    ×