search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம் - ராம்விலாஸ் பஸ்வானை அமைதிப்படுத்த அமித் ஷா முயற்சி
    X

    கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம் - ராம்விலாஸ் பஸ்வானை அமைதிப்படுத்த அமித் ஷா முயற்சி

    ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதற்காக அவரிடம் பாஜக தலைவர் அமித் ஷா பேச்சு வார்த்தை நடத்தினார். #AmitShah #RamVilasPaswan

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரஉள்ள நிலையில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சிகளாக வெளியேறி வருகின்றன.

    முதலாவதாக தெலுங்கு தேசம் வெளியேறியது. அடுத்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி வெளியேறியது. சிவசேனாவும் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் வெளியேறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் இதுசம்பந்தமாக கூறும் போது, 31-ந்தேதிக்குள் எங்களுக்கான சீட்டுகளை ஒதுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட முடிவுகளை எடுப்போம் என்று கூறியிருந்தார்.

    5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களை பாரதிய ஜனதாவிடம் காங்கிரஸ் காங்கிரஸ் கைப்பற்றியதால் காங்கிரசுக்கு செல்வாக்கு ஏற்பட்டு விட்டதாக கருதுகிறார்கள். இதனால் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்த பல கட்சிகளும் இப்போது காங்கிரஸ் பக்கம் தாவுவதற்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ராம்விலாஸ் பஸ்வானுடைய கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் சேரும் வகையில் தான் இந்த கெடுவை விதித்ததாக தெரிகிறது.

    பஸ்வானின் கட்சி பீகார் மாநிலத்தில் தான் செல்வாக்கு பெற்றதாக உள்ளது. அங்கு கடந்த தேர்தலில் 7 தொகுதிகள் பா.ஜ.க. கூட்டணியில் ஒதுக்கப்பட் டது. அதில் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது பாராளுமன்ற தேர்தலில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளமும், பாரதிய ஜனதாவும் கூட்டணி வைக்கின்றன. இரு கட்சிகளும் சம அளவில் சீட்டுகளை பிரித்துக் கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    அந்த மாநிலத்தில் மொத்தம் 40 எம்.பி. தொகுதிகள் உள்ளன. அதில் தலா 17 இடங்களில் போட்டியிட இரு கட்சிகளும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதி 6 இடங்கள் மட்டும் தான் உள்ளது. இதையோ அல்லது அதற்கும் குறைவான தொகுதியையோ பஸ்வானுக்கு ஒதுக்க பாரதிய ஜனதா திட்டமிட்டு இருக்கிறது.

    கடந்த தேர்தலில் 7 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இப்போது 6 தொகுதி என்பதையே பஸ்வான் ஏற்றுக் கொள்ள வில்லை. இன்னும் தொகுதி குறையலாம் என கருதுவதால் அவர் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேற தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

    பீகார் மாநிலத்தில் லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க உள்ளனர். இதில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்-மந்திரி ஜிதன்ராம் மாஞ்சி கட்சி ஆகியவை இடம்பெற உள்ளன.

    ஆளும் கட்சி கூட்டணியை விட இது வலுவாக இருப்பதாக கருத்து நிலவுகிறது. எனவே அந்த கூட்டணியில் இடம்பெறலாமா? என்ற எண்ணம் பஸ்வானுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தனது மகன் மூலம் கெடுவிதித்தார்.

    ராம்விலாஸ் பஸ்வான் கூட்டணியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் பாரதிய ஜனதா கவனமாக உள்ளது. எனவே பாரதிய ஜனதா பொதுச் செயலாளரும், பீகார் மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான பூபேதிரா யாதவை ரம்விலாஸ் பஸ்வான் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    அப்போது அங்கு ராம்விலாஸ் பஸ்வானும், அவரது மகன் சிராக் பஸ்வானும் இருந்தனர். அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பஸ்வான் மற்றும் அவரது மகன் இருவரையும் அழைத்துக்கொண்டு பூபேந்திரா யாதவ், அமித் ஷா வீட்டுக்கு வந்தார். அங்கு 1 மணி நேரம் அவர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆனால் ராம்விலாஸ் பஸ்வான் தங்களுக்கு எத்தனை சீட் என்பதை உடனே அறிவிக்க வேண்டும், எந்த தொகுதி என்பதையும் தெரிவிக்க வேண்டும், எங்களுக்கும் கணிசமான இடங்களை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதுமட்டுமல்லாமல் பாரதிய ஜனதா ராமர்கோவில் விவகாரத்தை மீண்டும் எழுப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனறும் ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

    அவருடைய நிபந்தனைகளை அமித்ஷா ஏற்றுக் கொண்டாரா? என்று தெரியவில்லை. எனவே அடுத்த கட்டமாக ராம்விலாஸ் பஸ்வான் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதற்கிடையே ராம்விலாஸ் பஸ்வானை காங்கிரஸ் கூட்டணிக்கு இழுப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

    ஆனால் இதுசம்பந்தமாக பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறும்போது, ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் எந்த தொகுதி ஒதுக்கீடு என்பது குறித்து தான் இப்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, கூட்டணிக்குள் குழப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

    ராம்விலாஸ் பஸ்வான் அதிரடி முடிவுகளை எடுப்பாரா? என்பது இனிமேல் தான் தெரியவரும். #AmitShah #RamVilasPaswan

    Next Story
    ×