search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி- ராகுல் காந்தி டுவிட்டரில் பாராட்டு
    X

    ராஜஸ்தானில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி- ராகுல் காந்தி டுவிட்டரில் பாராட்டு

    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். #RahulGandhi #Congress
    ஜெய்ப்பூர்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

    15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் அரசு விவசாய கடன்களை ரத்து செய்தன.

    மத்தியபிரதேசத்தில் விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலான கடனையும், சத்தீஸ்கரில் ரூ.6,100 கோடி வரையிலான விவசாய கடனையும் ரத்து செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரிகள் கமல்நாத், பூபேஷ் பாதேல் ஆகியோர் பதவி ஏற்றவுடன் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் ராஜஸ்தானிலும் விவசாய கடனை தள்ளுபடி செய்து காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

    ராஜஸ்தானில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

    அதன்படி பதவியேற்ற 2 தினத்தில் ரூ.18 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அம்மாநில புதிய முதல்-மந்திரியான அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

    விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் ரத்தாகி உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.


    காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற 3 மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது சிறப்பானது. நாங்கள் 10 நாட்கள் கேட்டோம். ஆனால் 2 நாட்களிலேயே செய்து முடித்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரசுக்கு போட்டியாக அசாமில் ரூ.600 கோடி விவசாய கடனும், குஜராத்தில் ரூ.625 கோடி மின் கட்டணமும் தள்ளுபடி செய்து அம்மாநில பா.ஜனதா அரசுகள் உத்தரவிட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. #RahulGandhi #Congress
    Next Story
    ×