என் மலர்
செய்திகள்

தெலுங்கானா முதல் மந்திரியாக நாளை மீண்டும் பதவியேற்கிறார் சந்திரசேகர ராவ்
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார். #TelanganaElections #ChandrashekharRao
ஐதராபாத்:
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது.
அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.
இதற்கிடையே, தெலுங்கானாவில் கடந்த 7-ம்தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ், இரண்டாவது முறையாக நாளை முதல் மந்திரியாக பதவியேற்கிறார்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நாளை மதியம் 1.30 மணியளவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தெரிவித்தனர்.
முதல் மந்திரி பதவியேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசர் ஈடுபட்டு வருகின்றனர். #TelanganaElections #ChandrashekharRao
Next Story






