search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு அமைந்தால் விவசாயிகள் கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - ராகுல் பேச்சு
    X

    தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசு அமைந்தால் விவசாயிகள் கடன் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - ராகுல் பேச்சு

    தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடனை ஒரே மூச்சில் தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். #RahulGandhi #Congress
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தீர்மானித்தார். இதையொட்டி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தலுக்கான அறிவிப்புடன் தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
     
    டிசம்பர் மாதம் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெலுங்கானா மாநிலத்தில் இரு இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஆதரவு திரட்டினார்.

    அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பைன்ஸா நகரம் மற்றும் காமாரெட்டி மாவட்டத்தில் சார்மினார் அருகே நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    நிர்மல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தெலுங்கானாவில் விரைவில் மாற்றம் வரும். டெல்லியில் மோடியின் ஆட்சியும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியும் தூக்கி எறியப்படும் என்று குறிப்பிட்டார்.



    நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தங்களது விளைபொருள்களுக்கன ஆதார விலை கிடைக்காததால் தெலுங்கானா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

    நான் போலியான பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பொய்யான வாக்குறுதிகளை கேட்க வேண்டும் என்றால் நீங்கள் மோடி அல்லது சந்திரசேகர ராவ் பேசும் கூட்டத்துக்கு செல்ல வேண்டும்.

    இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகள் கடன் 2 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தள்ளுபடி செய்வோம். அதுமட்டுமின்றி, பருத்தி கொள்முதல் விலை குவின்ட்டாலுக்கு 7 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழங்குடியினரின் நிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். பழங்குடியினர் மற்றும் வனப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்படும். வேலையில்லாத வாலிபர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

    தெலுங்கானாவில் அம்பேத்கர் பெயரால் உருவாக்கப்பட்ட திட்டத்தை  சந்திரசேகர ராவ் மாற்றி விட்டார். 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தீட்டப்பட்ட இந்த திட்டம் ஊழல் செய்யும் நோக்கத்தில் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் ராஜீப் சாகர், இந்திரா சாகர் திட்டங்களின் மதிப்பும் உயர்த்தப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் ஊழல்தான் பெரிதாக தெரிகிறது. இதன் பலன்களை அவரது குடும்பத்தாரும், நண்பர்களும், உறவினர்களும் அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

    இதைதொடர்ந்து, ஐதராபாத் கூட்டத்தில் பேசிய ராகுல், நாட்டை பிளவுப்படுத்த முதல்முறையாக ஒரு பிரதமர் முயற்சித்து வருகிறார். இன்று நாடு இருக்கும் நிலையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு பயப்படுகின்றனர். பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். #RahulGandhi #Congress
    Next Story
    ×