என் மலர்

  செய்திகள்

  பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: மத்திய அரசு விளக்கம்
  X

  பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: மத்திய அரசு விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. #PetrolDieselPriceHike #CentralGovt
  சென்னை:

  பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அவற்றை குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

  குறிப்பாக பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்பு கூட்டு வரி எனும் வாட் வரியை மாநில அரசுகளும் கணிசமாக குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

  இதையடுத்து பெட்ரோல்- டீசல் மீது மத்திய அரசும், மாநில அரசும் எவ்வளவு வரிகள் விதிக்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக பெட்ரோலிய நிறுவனங்கள் டீலர்களுக்கு மிக குறைந்த விலையில்தான் பெட்ரோல்-டீசலை வினியோகம் செய்கின்றன.

  இந்தியாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் தனது டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.39.21க்குதான் வழங்குகிறது. ஆனால் அந்த ஒரு லிட்டர் பெட்ரோல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியும், மாநில அரசுகள் விதிக்கும் வாட் வரியும் சேர்ந்து கொண்டு பெட்ரோல்-டீசல் விலையை 2 மடங்கு அதிகரிக்க செய்து விடுகின்றன.

  மத்திய அரசு விதிக்கும் கலால் வரிப்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசுக்கு வருவாயாக ரூ.19.48 கிடைக்கிறது. அதுபோல ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33ஐ மத்திய அரசு வருவாயாக பெறுகிறது. இந்த வரிக்கு பிறகு மாநில அரசுகள் தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப வாட் வரியை விதிக்கின்றன.

  இந்தியாவிலேயே அதிகபட்சமாக மும்பையில் 33.12 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மிக குறைவாக 26 சதவீதம்தான் விதிக்கப்படுகிறது.

  தமிழ்நாட்டில் பெட்ரோல்- டீசல் மீது 32.16 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் சராசரியாக கணக்கிட்டால் மாநில அரசுகள் சுமார் 30 சதவீதம் வாட் வரியை பெட்ரோல்-டீசல் மீது விதிக்கின்றன.

  இதனால்தான் கடந்த நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரி மூலம் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் 2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருந்தது.

  பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் மிக எளிதாக வருவாய் வருவதால் மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றை இழக்க மனமில்லாமல் உள்ளன. மாநில அரசுகளை பொறுத்த வரை ராஜஸ்தான், ஆந்திரா உள்பட சில மாநிலங்கள் தங்களது வருவாய் குறைந்தாலும் பரவாயில்லை என்று வாட் வரியை குறைத்துள்ளன.

  ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை கலால் வரியை குறைக்க இயலாது என்று திட்டவட்டமாக 2 தடவை அறிவிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு இந்த நிலைப்பாடு எடுத்ததற்கு என்ன காரணம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைத்தால் மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். நிதி பற்றாக்குறையை குறைக்கும் இலக்கை நம்மால் எட்ட இயலாது.


  தற்போதைய பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணை உற்பத்தி குறைந்து போனதே முக்கிய காரணமாகும். எண்ணை வளம் மிக்க சில நாடுகள் தங்களது எண்ணை உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டன. அதன் தாக்கம்தான் தற்போது இந்தியாவில் எதிரொலித்துள்ளது.

  அதுமட்டுமின்றி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு வழி வகுத்து விட்டது. இந்த பிரச்சனைகள் இன்னும் சில தினங்களில் தானாக சரியாகி விடும்.

  இதற்காக கலால் வரியை குறைத்தால் அது மத்திய அரசின் நிர்வாக பணிகளில் சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டு விடும்.

  அப்படி நிதி ஒதுக்கீடு செய்யாமல் போனால் அதுவும் மக்களைதான் பாதிக்கும். எனவேதான் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

  பெரும்பாலானவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் கலால் வரியில் 2 ரூபாய் குறைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி 2 ரூபாய் குறைக்கும் பட்சத்தில் அது ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை உருவாக்கி விடும். இது வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கடும் சிக்கல்களை ஏற்படுத்தும்.

  இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தபோது இத்தகைய முடிவைதான் அதிகாரிகள் எடுத்தோம். தற்போதும் அதே முடிவை தான் கையாண்டு உள்ளோம்.

  இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். #PetrolDieselPriceHike #CentralGovt
  Next Story
  ×