search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை இல்லை - ராகுல் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
    X

    ரபேல் தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை இல்லை - ராகுல் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

    ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்திய ராகுல்காந்தியின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது. #RahulGandhi #RafaleScam
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்துக்கு பிரான்ஸ் நாட்டின் ரபேல் நிறுவனத்திடம் இருந்து போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

    பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசுகையில் ராகுல்காந்தி இதுபற்றி குறிப்பிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டுக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேரடியாகவே மறுப்பு தெரிவித்து பேசினார்.

    என்றாலும் ராகுல்காந்தியும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு பற்றி பேசி வருகிறார்கள். இந்த முறைகேடு பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.

    அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:-


    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு என்று அந்த கட்சிக்கு தவறான தகவல் தரப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. காங்கிரஸ் முதலில் தனது கட்சியின் நேர்மையை நிரூபிக்க வேண்டும். அறியாமை என்ற தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது.

    அந்த கட்சியில் ஒருவருக்கு புரிந்து கொள்ளும் தன்மை இல்லாவிட்டால் அந்த கட்சி முழுவதுக்குமே புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் போய்விடும்.

    பா.ஜனதா அரசானது உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்கிறது. சிலருக்கு இது தெரிந்திருக்கவில்லை. இதில் குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக அறியாமை தொற்றிக் கொண்டு உள்ளது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார். #RahulGandhi #RafaleScam
    Next Story
    ×