search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் காயம் - கேரள மாணவி ஹனானின் சிகிச்சையை நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்
    X

    விபத்தில் காயம் - கேரள மாணவி ஹனானின் சிகிச்சையை நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்

    கேரளாவில் கார் விபத்தில் காயமடைந்த மாணவி ஹனான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பேஸ்புக்கில் நேரடி ஒளிப்பரப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Hanan
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹனான், கல்லூரி மாணவி. படிப்பு செலவிற்காக மாணவி ஹனான் தெருக்களில் மீன் விற்று பணம் திரட்டினார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து மாணவி ஹனான் பிரபலமானார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார். இச்சம்பவத்திற்கு பிறகு மாணவி ஹனானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்தன. அவர், தனது செலவிற்கு கிடைத்த பணத்தில் சிறு தொகையை கேரள வெள்ள நிவாரண நிதிக்கும் அளித்தார்.

    மேலும் ஹனான் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நேற்று முன்தினம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பினார். அப்போது ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது கார் நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில் ஹனான் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஹனானை மீட்டு எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.


    அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவி ஹனான்னுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சியை பதிவு செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக பதிவிட்டார். மேலும் ஹனானுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சியை நான்தான் முதலில் பதிவிட்டுள்ளேன் என்றும் குறிப்பு அனுப்பினார்.

    வாலிபரின் செய்கையால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சிகிச்சை அறையில் இருந்து வெளியேறுமாறு கூறினர். ஆஸ்பத்திரியில் இருந்த மற்ற நோயாளிகளும் வாலிபரின் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர் இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    இதுபற்றி எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதியின்றி ஹனானின் சிகிச்சை காட்சிகளை பதிவு செய்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அவர், பேஸ்புக்கில் பதிவிட்ட காட்சிகள் அடிப்படையில் அவரை தேடி வருகிறார்கள். #Hanan
    Next Story
    ×