search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - புகாரில் சிக்கியவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது
    X

    சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - புகாரில் சிக்கியவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது

    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. #LokSabha #CriminalLaw
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் கதுவாவில் ஒரு சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட செயல், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் உன்னா நகரில் நடந்த கற்பழிப்பும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசர சட்டத்தை கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர் களின் விவாதத்துக்கு பிறகு, நேற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.



    இந்த மசோதாவின்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுட்கால சிறை அல்லது மரண தண்டனையாகவும் இருக்கும்.

    12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத் காரம் செய்தால், 20 ஆண்டு சிறை அல்லது ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப் படும். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப் படுகிறது. அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், எவ்வளவு பெரிய செல்வாக்கு உடையவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாலியல் பலாத்கார வழக்குகளை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், கோர்ட்டு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை, 6 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு முடிவு செய்யும் முன்பு, அரசு வக்கீல் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதியின் கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதே மசோதாவின் நோக்கம். தற்போது இருக்கும் இந்திய தண்டனை சட்டத்தில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பலாத்காரம் தொடர்பாக விசேஷ ஷரத்துகள் இல்லை. எனவே, இந்த கடுமையான மசோதாவை கொண்டு வந்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, சபையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் தம்பிதுரை, “இந்த மசோதாவின் ஷரத்துகளை நன்றாக விளம்பரப்படுத்த வேண்டும். அதன்மூலம், கற்பழிப்பை தடுக்க வாய்ப்பாக அமையும்” என்று யோசனை தெரிவித்தார். அதனை கிரன் ரிஜிஜு ஏற்றுக்கொண்டார்.  #LokSabha #CriminalLaw #Tamilnadu 
    Next Story
    ×