search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதுவா கற்பழிப்பு வழக்கில் நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
    X

    கதுவா கற்பழிப்பு வழக்கில் நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    கதுவா கற்பழிப்பு வழக்கில் ஜம்மு காஷ்மீர் சிறையில் உள்ள குற்றவாளிகளை குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #KathuaCase
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மன்னு என்பவரை போலீசார் துன்புறுத்துவதாக பதன்கோட் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக அம்மாநில டி.ஜி.பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக பதிலளித்த டி.ஜி.பி இந்த குற்றச்சாட்டில் உண்மை ஏதும் இல்லை என பதிலளித்தார்.

    இதேபோல், சிறப்பு புலனாய்வுத்துறை அதிகாரிகளும் இந்த மனு பொய்யானது என தங்களது பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து, சிறையில் இருக்கும் மன்னுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, கதுவா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளை ஜம்மு காஷ்மீர் சிறையில் இருந்து பஞ்சாப்பில் உள்ள குர்தஸ்ப்பூர் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    மேலும், விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றால், பஞ்சாப் அல்லது அரியானா மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கை மாற்றிக்கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இந்த வழக்கினை விசாரித்து வரும் நீதிபதி மற்றும் சிறப்பு அரசு வக்கீல் ஆகியோருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோர்கள் அவர்களை சந்திக்க விரும்பினால் காஷ்மீர் மாநில அரசின் செலவில் அவர்களை பார்க்க அனுமதிக்குமாறும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. #KathuaCase
    Next Story
    ×