search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக பணி நிறைவு பெற்றது - ராகுல்காந்தியின் அடுத்த இலக்கு சத்தீஸ்கர்
    X

    கர்நாடக பணி நிறைவு பெற்றது - ராகுல்காந்தியின் அடுத்த இலக்கு சத்தீஸ்கர்

    கர்நாடகா சட்டசபை தேர்தல் பணிகள் முடிவடைந்ததால், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலத்தை குறிவைத்து இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். #Congress #RahulGandhi
    ராய்ப்பூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் ராகுல்காந்தி மிக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டார். 3 மாதத்துக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிய அவர் 9 முறை கர்நாடகாவுக்கு வந்து பிரசாரம் செய்தார். ஆனாலும், ஆட்சியை தக்க வைக்க முடியவில்லை.

    காங்கிரசே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி சவால் விட்டு பேசி வருகிறார். அவர் சொன்னது போலவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை ஒவ்வொன்றாக பாரதிய ஜனதா கைப்பற்றி வருகிறது. சொல்லி அடிப்போம் என்பது போல் மோடியின் நடவடிக்கை தீவிரமாக இருக்கிறது.

    தற்போது கர்நாடகாவும் பறிபோய் விட்டதால் பஞ்சாப், மிஜோரம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இதையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் மோடியின் திட்டமாகும்.

    இதற்கு இடம் கொடுக்காத வகையில் இனி வரும் தேர்தல்களில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் திட்டம் தீட்டி உள்ளது.

    அடுத்ததாக டிசம்பர் மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களிலுமே பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது.

    அதே நேரத்தில் அங்கு முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. இதனால் அந்த 3 மாநிலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சிக்கிறது.


    இதில், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார்கள். ஏனென்றால், கடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மிக நெருக்கமாக மக்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பெற்று இருந்தது.

    அப்போது பாரதிய ஜனதாவுக்கு 41.04 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.29 சதவீத ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 49 இடங்களிலும், காங்கிரஸ் 39 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    தற்போது அங்கு ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இதை பயன்படுத்தி இந்த தடவை எளிதாக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என காங்கிரஸ் நினைக்கிறது.

    இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பணிகளை இப்போதே ராகுல் காந்தி முடுக்கி விட்டுள்ளார். இந்த மாநிலத்தில் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர்.


    அவர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா செயல்படுவதாக கூறி அதை மக்களிடம் விரிவான பிரசாரமாக கொண்டு சென்று அவர்களின் ஓட்டுகளை காங்கிரஸ் பக்கம் இழுத்து விடலாம் என கருதுகிறார்கள்.
    இதற்கான பணிகளை செய்யும்படி ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். அங்குள்ள 27 மாவட்டங்களிலும் மக்களின் மனநிலை அறிந்து அதற்கு ஏற்றார் போல் தேர்தல் பிரசார திட்டங்களை வகுக்கும்படியும் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் ராகுல்காந்தி விரைவில் அங்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்கும் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதே போல் ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களிலும் அதிக அளவில் கவனம் செலுத்த உள்ளனர். #RahulGandhi #Congress
    Next Story
    ×