search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த ‘பியூன்’ கைது
    X

    ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த ‘பியூன்’ கைது

    ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த பியூன் கே.நரசிம்ம ரெட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Peon #NarasimhaReddy
    நெல்லூர்:

    லஞ்சம் வாங்குவதில் சாதனையின் உச்சத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அந்த பியூனின் பெயர் கே.நரசிம்ம ரெட்டி(வயது 55).

    இவர், ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் தனது 21 வயதில் 1984-ம் ஆண்டு ‘பியூன்‘ வேலைக்கு சேர்ந்தார். அப்போது அவருக்கு மாதச் சம்பளம் ரூ.650. தற்போது மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமாக பெற்று வருகிறார். கடந்த 34 ஆண்டுகளாக இதே அலுவலகத்தில்தான் இவருக்கு பணி.



    இந்த சம்பளத்தில் நகரத்தில் வசிப்பவர்கள் இழுபறியாகத்தான் குடும்ப வாழ்க்கையை நடத்தும் சூழ்நிலை இருக்கும். ஆனால் அதிகமாக லஞ்சப் பணம் புழங்கும் இடமாக கூறப்படும் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பணி புரிந்ததால் என்னவோ, நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை நாளடைவில் குபேரன் போல மாறியது.



    தனக்கு பல முறை கிடைத்த பதவி உயர்வுகளையும் ஏற்க மறுத்து தொடர்ந்து நெல்லூர் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திலேயே அவர் பியூனாக பணியாற்றி வந்தார்.

    நெல்லூர் எம்.வி. அக்ரஹாரத்தில் 3,300 சதுர அடி கொண்ட சொகுசு பங்களாவில் வசித்து வரும் நரசிம்ம ரெட்டி அண்மையில், காலிமனை ஒன்றை விலைக்கு வாங்கினார். இது அவருடைய 18-வது நிலச்சொத்து ஆகும். லஞ்சம் வாங்காமல் எந்த காரியத்தையும் செய்வதில்லை என்பதை கொள்கையாக கொண்டவர் எனக் கூறப்படும் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆந்திர லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏற்கனவே ஏராளமான புகார்கள் வந்தன. இந்த நிலையில் அவர் வாங்கிய 18-வது சொத்து பற்றியும் புகார்கள் குவிந்தன.

    இதையடுத்து பியூன் நரசிம்மரெட்டி சேர்த்துள்ள சொத்துகள் குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கண்காணிக்கத் தொடங்கினர். நேற்று முன்தினம் அவருடைய வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனையும் நடத்தினர்.

    அப்போது, அவர் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டது. அவருடைய வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 70 ஆயிரம், 2 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்கள், எல்.ஐ.சி.யில் ரூ.1 கோடி டெபாசிட் செய்ததற்கான பாலிசிகள், ரூ.20 லட்சம் வங்கி சேமிப்பிற்கான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 18 வீட்டு மனைகள், 50 ஏக்கர் வேளாண் நிலம் மற்றும் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான சொத்து பத்திரங்களும் சிக்கின.

    இதையடுத்து பியூன் நரசிம்மரெட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  ஆந்திராவில் ரூ.100 கோடிக்கு சொத்து சேர்த்த பியூன் கே.நரசிம்ம ரெட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Peon #NarasimhaReddy #Tamilnews 
    Next Story
    ×