search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகாலயா சட்டசபை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது
    X

    மேகாலயா சட்டசபை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது

    சட்டசபை தேர்தலை வரும் 27-ம் தேதி சந்திக்கும் மேகாலயா மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. #Meghalayapolls #Campaign
    ஷில்லாங்:

    60 இடங்களை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது. வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் வில்லியம்நகர் தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனாத்தன் சங்மா சமீபத்தில் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 59 தொகுதிகளில் நாளை மறுதினம் நடைபெறும் தேர்தலில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    இம்மாநிலம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக உச்சகட்ட தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வாக்காளர்களிடையே ஆதரவு திரட்டினர்.

    இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. ரில்பாங் பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மத்திய முன்னாள் மந்திரியும், பாராளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று வாக்குகளை சேகரித்து பேசினார்.

    9 லட்சத்து 29 ஆயிரத்து 333 பெண்கள் உட்பட 18 லட்சத்து 44 ஆயிரத்து 785 வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர். இவர்களில் 89 ஆயிரத்து 45 பேர் முதன்முறை வாக்காளர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 193 வாக்குச்சாவடிகளும், பெண்களால் நிர்வகிக்கப்படும் 67 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    வாக்குப்பதிவை நியாயமாகவும், அமைதியான முறையிலும் நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 27-ம் தேதி பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews #Meghalayapolls #Campaign
    Next Story
    ×