என் மலர்
செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக சர்ச்சை கருத்து - மத்திய அரசு விளக்கம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடியின் கருத்து தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் இரண்டாம்கட்ட தேர்தலின்போது பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
அகமது பட்டேலை குஜராத் முதல் மந்திரியாக்க முன்னர் பாகிஸ்தான் உளவுத்துறையில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர்கள் பரிந்துரை கடிதம் எழுதி வருவது ஏன்? என்னை இழிபிறவி என்று கூறியதன் மூலம் குஜராத் மக்களை அவமதித்த மணி சங்கர அய்யர் பாகிஸ்தான் தூதருடன் ரகசியமாக சந்தித்தது ஏன்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.
மணி சங்கர அய்யர் வீட்டில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் பாகிஸ்தான் உயர் தூதர், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சதி செய்ததாக அவதூறான வகையில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கையறு நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக பிரதமர் மோடி பரப்பிவரும் தவறான புனைக்கதைகளால் தான் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சனையை மையமாக வைத்து பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் கடந்த ஒருவார காலமாக அமளி நடப்பதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு காங்கிரஸ் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் காணப்படவில்லை.
இந்நிலையில், இன்று பிற்பகல் மாநிலங்களவையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் நாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை கேள்விகுறியாக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கு கிடையாது என்று குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் பிரதமரின் தேர்தல் பிரசார பேச்சு தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலின்போது இருதரப்பினரும் பல்வேறு வகையில் பேசியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் நாட்டுக்கு ஆற்றியுள்ள பங்களிப்பை கேள்விகுறியாக்கும் எண்ணம் பிரதமர் மோடிக்கு கிடையாது. அப்படி உருவாக்கப்பட்ட எண்ணம் மிக தவறானதாகும் என்று அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.
Next Story