search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளின் ஆய்வுப்பணி நீடிப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
    X

    பணமதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளின் ஆய்வுப்பணி நீடிப்பு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டை நெருங்கும் நிலையிலும் திரும்ப பெறப்பட்ட நோட்டுகள் ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது
    புதுடெல்லி:

    கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தது. மக்கள் தங்களிடம் வைத்திருந்த மேற்படி நோட்டுகள் வங்கிகள் மூலம் பெறப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நோட்டுகளை எண்ணும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

    இதில் 99 சதவீதம் நோட்டுகள் திரும்பி வந்து விட்டதாக கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மேற்படி நோட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதன் தற்போதைய நிலவரம் குறித்து பி.டி.ஐ. செய்தியாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.



    இதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில், கடந்த 30-ந்தேதி வரை 1,134 கோடி 500 ரூபாய் நோட்டுகள், 524.90 கோடி 1000 ரூபாய் நோட்டுகள் என முறையே ரூ.5.67 லட்சம் கோடி மற்றும் ரூ.5.24 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள நோட்டுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் கூறியுள்ளது. இந்த பணிகளில் 66 அதிநவீன ஆய்வு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு அடையும் இந்த நேரத்திலும் திரும்ப பெறப்பட்ட நோட்டுகளின் ஆய்வுப்பணிகள் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×