search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வுப்பணி"

    • திட்டத்திற்கு எதிராக இருந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.
    • விரைவில் பணிகளை தொடங்கி இப்பகுதியில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் புளியந் தோப்பு, சைதாப்பேட்டை, அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய 4 இடங்களில் மாநக ராட்சிக்கு சொந்தமான இறைச்சி கூடங்கள் உள்ளன.

    இறைச்சிக்காக கால் நடைகளை இந்த கூடங்களில் மட்டுமே வெட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.

    புளியந்தோப்பு இறைச்சிக் கூடம் மிகப் பெரியது. அதிகளவில் ஆடு, மாடுகளை வெட்டி இறைச்சிகளை கையாளும் மையமாகும். வார நாட்களில் 2 ஆயிரம் ஆடுகள், 100 மாடுகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள், 200-க்கும் மேற்பட்ட மாடுகளும் வெட்டப்படுகின்றன. இங்கு மட்டும் தான் மாடுகளை வெட்டும் வசதி உள்ளன.

    இந்த இறைச்சிக் கூடங்கள் பல ஆண்டுகளாக சுகாதாரக்கேடுடன் காணப்படுகிறது. திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை இங்கு மோசமாக உள்ளது. இந்த இறைச்சி கூடத்தை நவீனப் படுத்த கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது.

    டெண்டர் விட்டு, தனியார் மூலம் பணிகளும் தொடங்கி முதல் திட்டப் பணிகள் நிறைவடைந்து 2-வது திட்டப்பணிகள் தொடங்க இருந்தது. இந்நிலையில் இறைச்சிக்கூடம் நவீனமயமாக்கப்பட்டால் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என இந்த திட்டத்தை எதிர்த்து இறைச்சி வியாபாரிகள் கோர்ட்டுக்கு சென்றனர்.

    வழக்குகள், இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு, அரசியல் காரணம் போன்ற வற்றால் 2-ம் திட்டப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப் பட்டது. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி நடைபெறும் நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு மாநகராட்சிக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இந்நிலையில் மாநக ராட்சி இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன் புளியந்தோப்பு இறைச்சி கூடத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கு விதிகளை மீறி கொட்டப்பட்டிருந்த கட்டுமான கழிவுகளை அகற்றுமாறும், கால்நடை அறுக்கும் கூடத்தை பார்வையிட்டு அந்த பகுதியை தூய்மையாக பராமரிக்கு மாறும் அங்கு உருவாகும் கழிவுகளை முறையாக வெளியேற்று மாறும் அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    கிடப்பில் போடப்பட்ட நவீன இறைச்சி கூட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

    இத்திட்டத்திற்கு எதிராக இருந்த வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் பணிகளை தொடங்கி இப்பகுதியில் சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×