என் மலர்

  செய்திகள்

  ஜி.எஸ்.டி. மூலம் சுதந்திரமும், ஜனநாயக நிலைப்பாடும் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ளும்: மம்தா பானர்ஜி
  X

  ஜி.எஸ்.டி. மூலம் சுதந்திரமும், ஜனநாயக நிலைப்பாடும் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ளும்: மம்தா பானர்ஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போதைய நிலையிலேயே சரக்கு, சேவை வரியை அமல்படுத்தி இருப்பதன் மூலம் நாட்டின் சுதந்திரமும், ஜனநாயக நிலைப்பாடும் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ளும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
  கொல்கத்தா:

  தற்போதைய நிலையிலேயே சரக்கு, சேவை வரியை அமல்படுத்தி இருப்பதன் மூலம் நாட்டின் சுதந்திரமும், ஜனநாயக நிலைப்பாடும் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ளும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

  நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளுக்கு பதிலாக சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தி இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு உள்ள இந்த மிகப்பெரிய வரி சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த விழாவில் அரசு அறிமுகம் செய்தது.

  ஆனால் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அவசரகதியில் செயல்படுத்தியதாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன. அதிலும் குறிப்பாக தற்போதைய நிலையிலேயே இந்த வரியை அமல்படுத்தியதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார்.  இது குறித்து அவர் தனது பேஸ்புக் தளத்தில் கூறியிருப்பதாவது:-

  ஜி.எஸ்.டி.யில் உள்ள மற்ற விஷயங்களை விட, அதில் உள்ள கடுமையான கைது பிரிவு வணிகத்தை பெருமளவில் துன்புறுத்தும். சிறிய மற்றும் நடுத்தர பிரிவு வர்த்தகர்களுக்கு பெரும் பாதகமாக அமைவதுடன், சில பிரிவுகளில் ஜாமீனில் வெளிவர முடியாத கைதுக்கான வாய்ப்பும் உள்ளது. ஜி.எஸ்.டி. சட்டத்தில் இருக்கும் இந்த கொடூரமான கைது பிரிவை கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

  தற்போதைய ‘வாட்’ வரிச்சட்டத்தில் கூட வரி ஏய்ப்பு செய்வோரை கைது செய்ய மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்காவது கடுமையான வரி ஏய்ப்பு நடைபெறுவதாக அவர்கள் கண்டறிந்தால், அது குறித்து வழக்குப்பதிவு செய்து சட்டத்தின் படியே நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

  ஆனால் இந்த ஜி.எஸ்.டி.யில் 4 வெவ்வேறு விதமான வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்களே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

  மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை உடையோர் பழிவாங்கப்படும் சூழல் நிலவும் நாட்டில், அரசின் கொள்கை முடிவுகளை எதிர்க்கும் வர்த்தக துறையினரை பழிவாங்க ஜி.எஸ்.டி.யின் இந்த கைதுப்பிரிவு பயன்படுத்தப்படக் கூடும் என்ற ஆழ்ந்த கவலையை எனக்கு ஏற்படுத்தி உள்ளது.

  இந்த கைது பிரிவுக்கு எதிராக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேற்கு வங்காளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. உண்மையை சொல்லப்போனால் ஜி.எஸ்.டி.யின் உண்மையான நோக்கத்தில் இருந்து பல துறைகளில் அரசு விலகிச்செல்கிறது.

  1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவில் இந்தியா தனது சுதந்திரத்தை வென்றெடுத்தது. தற்போது 2017, ஜூன் 30-ந்தேதி நள்ளிரவில் நாட்டின் சுதந்திரமும், ஜனநாயக நிலைப்பாடும் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. கேலிக்கூத்தான இன்ஸ்பெக்டர்கள் ஆட்சி திரும்பியுள்ளது.

  வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வில் ஜூன் 30-ந்தேதி நள்ளிரவு முதல் இருள் சூழ்ந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

  இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 
  Next Story
  ×