என் மலர்
இந்தியா

அமர்நாத் யாத்திரை சென்ற 20 தமிழர்கள் நடுவழியில் தவிப்பு- பலத்த மழை காரணமாக முகாமில் தங்கி உள்ளனர்
- கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் இருந்து 20 பேர் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு சென்று 8-ந்தேதி பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
- பலத்த மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
சென்னை:
ஜம்மு-காஷ்மீரில் இமய மலை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் பக்தர்கள் அமர்நாத் யாத்திரை செல்வது வழக்கம்.
அதேபோல் இப்போதும் யாத்திரை தொடங்கிய நிலையில் அங்கு பெய்து வரும் பலத்த மழை, நிலச் சரிவு, வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் நடுவழியில் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் இருந்து 20 பேர் அமர்நாத் யாத்திரை புறப்பட்டு சென்று 8-ந்தேதி பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு மலையில் இருந்து இறங்கும் சமயத்தில் பலத்த மழை பெய்ததால் அவர்களால் உடனடியாக வரமுடியவில்லை. கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ வீரர்கள் உதவியுடன் ஸ்ரீநகரில் 'பால்டால்' என்ற இடத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த ரம்யா உள்பட 20 பேர் அங்கிருந்து தமிழகத்துக்கு வருவதற்கு உதவி கேட்ட நிலையில் ராணுவ வீரர்கள் அந்த சாலையை அதற்குள் சரிப்படுத்தி கொடுத்துவிட்டனர்.
இதனால் 2 பெண்கள் உள்பட 11 பேர் நாளை ரெயில் மூலம் ஈரோடு வருகிறார்கள். மீதம் உள்ள 9 பேர் விமானத்தில் சென்னை வருகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






