என் மலர்
இந்தியா

அண்ணனை கம்பியால் அடித்துக் கொன்று, கர்ப்பிணி அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 15 வயது சிறுவன்
- அண்ணன், அண்ணியின் உடல்களை தாயின் உதவியுடன் வீட்டின் பின் புறம் சிறுவன் புதைத்தான்.
- சிறுவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பீகாரில் இருந்து பல வருடங்களுக்கு முன் குஜராத்திற்கு குடிபெயர்ந்த ஒரு குடும்பம் ஜூனகத் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் குடியேறியது.
கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகப் பணியாற்றிய தந்தை, கோவிட் காலத்தில் இறந்தார். அதன் பிறகு எலக்ட்ரீஷியனாக வேலை செய்து தனது தாயையும் பதினைந்து வயது தம்பியையும் மூத்த மகன் கவனித்துக் கொண்டார். மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
தனது அண்ணன் தன்னை அடிக்கடி அடிப்பதால் அவர் பதினைந்து வயது தம்பி வெறுப்புடன் இருந்து வந்தான். இந்நிலையில் கடந்த அக்டோபர் 16 அன்று வீட்டில் வைத்து அண்ணனை இரும்புக் கம்பியால் சிறுவன் கொடூரமாக அடித்துக் கொன்றான்.
பின்னர் 6 மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அவரையும் சிறுவன் கொடூரமாக படுகொலை செய்தான். அண்ணன், அண்ணியின் உடல்களை தாயின் உதவியுடன் வீட்டின் பின் புறம் சிறுவன் புதைத்தான்.
அண்ணனும் அண்ணியும் பீகாருக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லி, அக்கம்பக்கத்தவரை தாயும் மகனும் நம்ப வைத்துள்ளனர்.
தீபாவளி நேரத்தில் பீகாரில் உள்ள உறவினர்கள் அண்ணன்-அண்ணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது பதில் இல்லை. சிறுவனைத் தொடர்புகொண்டபோது அவன் சரியாகப் பேசவில்லை.
பின்னர் தாயைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் சாலை விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். விபத்து குறித்த புகைப்படங்களை உறவினர்கள் அனுப்ப சொன்னபோது தாயும் மகனும் மறுத்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் ஜுனாகடில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சுற்றியுள்ள பகுதிகளில் எந்த விபத்தும் இல்லை என்றும், கணவன்-மனைவி யாரும் இறக்கவில்லை என்றும் போலீசார் கூறினர்.
இதனால் அவர்களை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்தனர். புகாரை ஏற்று, தாயையும் மகனையும் காவல்துறையினர் கண்காணித்த போது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
வீட்டில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த சிறுவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருந்தது காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலை வழக்குப் பதிவு செய்து, தாயையும் மகனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






