என் மலர்
கதம்பம்
- வானம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும்.
- நடு இரவில் சூரியனை பார்க்கலாம்.
பொதுவாக விடியல் வந்தால் நிச்சயம் இரவு வரும். மீண்டும் விடியும் என்பதுதான் தெரியும். ஆனால் இங்கு 6 மாதம் விடியல் மட்டுமே இருக்கும். அடுத்த 6 மாதம் இரவு மட்டுமே இருக்கும். இந்த நாடுதான் பூமியின் கடைசி நாடாகவும் உள்ளது.
இப்படி 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் இருக்கும் நாடான நார்வேயில் ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவு பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகின்றோம்.
இங்கு பகல், இரவு 6 மாதங்கள் நீடிக்க அதன் அமைவிடம்தான் காரணமாக உள்ளது. அதாவது இது பூமியின் கடைசி நாடாக இருப்பதால், அது தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில் இந்த நாடு அமைந்துள்ளது. எனவேதான் இதன் இரவு 6 மாதமும், பகல் 6 மாதமும் நீடிக்கிறது.
6 மாத இரவின் போது சூரியன் அடிவானத்திற்கு கீழ் மறைந்திருக்குமாம். அதற்கு போலார் நைட் என்று அழைக்கின்றனர். அந்த இரவை காண கண்கோடி வேண்டும் என்று அனுபவித்தவர்கள் சொல்வார்கள். இதற்காகவே இந்த இரவை அனுபவிக்க பலர் இங்கு செல்கின்றனர். இந்த இரவானது அக்டோபர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கிறது.
ஏன் அது வசீகரிக்கும் இரவு என்று சொல்லப்படுகிறது தெரியுமா..? ஏனெனில் சூரியன் வானின் அடிப்பகுதியில் ஒளிந்திருப்பதால் ஸ்வால்பார்ட் பகுதி முழுவதும் சூரியனின் வெளிச்சம் பட்டும் படாமலும் தெரியும். இதனால் வானம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும்.
அதன் பிரதிபளிப்பு பளிங்கு கற்களைபோல் ஒளிரும் பனிக்கட்டிகள் மீது காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. இதன் அழகை காணவே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு குவிகின்றனர்.
இங்கு மற்றுமொரு அரிய நிகழ்வு என்னவெனில் நடு இரவில் சூரியனை பார்க்கலாம். அதாவது ஏப்ரல் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை ஸ்வால்பார்ட் தீவில் கப்பலில் பயணம் செய்தால் நள்ளிரவில் சூரியன் தெரியும். சூரியனுக்கு கீழ் நீங்கள் பயணம் செய்வீர்கள். அதிலிருந்து வீசும் ஒளி பல வண்ணங்களை நம் மீது தூவிச் செல்லும். அந்த வண்ணங்கள் அந்த பகுதியை ரம்மியமான அழகால் கொள்ளைகொள்ளும்.
இந்த நாட்டில் பகல் , இரவு எப்படி இருந்தாலும் வாழ்க்கை தரம், பொருளாதாரம் தங்குதடையின்றி நடந்துக்கொண்டிருக்கிறது.
- அரசன்.
- எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது..
குறிப்பிட்ட நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதை வைத்தே இது தரப்படுத்தப்படுகின்றது.
1.சிங்கப்பூர் - 195 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
2. ஜப்பான் - 193 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
3. பின்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின்- 192 நாடுகளுக்கு விசா தேவையில்லை .
4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே- 191 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
5. யூ.கே., பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து- 190 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
6. ஆஸ்திரேலியா, கிரீஸ்- 189 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
7. கனடா, மால்டா, போலந்து- 188 நாடுகளுக்கு விசா தேவையில்லை .
8. செசியா, ஹங்கேரி- 187 நாடுகளுக்கு விசா தேவையில்லை .
9. யு.எஸ். எஸ்டோனியா- 186 நாடுகளுக்கு விசா தேவையில்லை .
10. லத்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 185 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
மலேசியா பாஸ்போர்ட் 12 வது இடம்- 183 நாடுகள் .
கொலம்பியா 37வது இடம்- 134 நாடுகள்.
சீனா 60வது இடம்- 85 நாடுகள்.
தாய்லாந்து 61வது இடம்- 82 நாடுகள்.
இந்தியா 85வது இடம்- 57 நாடுகளுக்கு விசா தேவையில்லை (கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்து 5 இடங்கள் கீழே விழுந்துள்ளது)
இலங்கை 96வது இடம்- 44 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
உலகின் மிகவும் பலவீனமான முதல் 15 பாஸ்போர்ட் ஐ எடுத்துக்கொண்டால் ஆப்கானிஸ்தான் முதலிடம்.
பாக்கிஸ்தான் 5ஆம் இடம், பங்களாதேஷ் 10ஆம் இடம். ஸ்ரீலங்கா 15ஆம் இடம்.
-தனுஜன் ரவிச்சந்திரன்
- ஒரு கரண்டி அளவானது 50 ஆக்டிலியன் கிராத்தை விட அதிகமாக இருக்கும்.
- பூமி போன்று 10 மடங்கு எடை கொண்டதாக இருக்கும்!
ஒரு ஸ்பூன் பனிக்கட்டியை எடுத்துக் கொண்டால், அதன் எடை சுமார் 37 கிராம்தான் இருக்கும்.
ஒரு ஸ்பூன் கிரானைட் பாறையை எடுத்துக் கொண்டால், அதன் எடை 280 கிராம்தான் இருக்கும்.
சூரிய மண்டலத்திலிருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்துப்பார்த்தால், அதன் எடை 29 ஆயிரம் கிராம் அளவு இருக்கும்.
அதே நேரம் நீயூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அளந்தால் அது எவரெஸ்ட் சிகரத்தை விட எடை கூடியதாக இருக்கும்.
ஆனால் இதை விட மிகப்பெரிய வியப்பு கருந்துளைகளைப் பற்றி பேசும்போது தான் இருக்கிறது. அதன் ஒரு கரண்டி அளவானது 50 ஆக்டிலியன் கிராத்தை விட அதிகமாக இருக்கும். அதாவது இந்த பூமி போன்று 10 மடங்கு எடை கொண்டதாக இருக்கும்!
கருந்துளையில் காணப்படும் இந்த வியக்கத்தக்க பொருள் செறிவுதான், அதன் அசாதாரண ஈர்ப்பு சக்திக்கான காரணமாகும்.
-இம்ரான் பாரூக்
- அறிவியல் தகவல்கள் தெளிவாக இருக்கின்றன.
- பிழைத்திருக்க வேண்டுமானால் உலகின் வெப்பநிலை உயர்வை குறைந்தபட்சம் 1.5 டிகிரிக்குள்ளாகவேனும் கட்டுப்படுத்த வேண்டும்.
நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நாம் நீந்திக்கொண்டிருக்கும் பானையிலிருக்கும் நீர் கொதிக்கும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நீரில் அவித்த முட்டையை எப்படி மீண்டும் பழைய நிலைக்கு உயிர்ப்பிக்க முடியாதோ அதுபோலவே மீளமுடியாத நிலையை நாமும் நம் அன்புக்குரியவர்களும் வேகமாய் நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.
இது குடுகுடுப்பைக்காரனின் எதிர்காலம் குறித்த உளறல் அல்ல. அறிவியல் தகவல்கள் தெளிவாக இருக்கின்றன.
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பமான 10 ஆண்டுகளாகக் கடந்த 10 ஆண்டுகளும், அவற்றில் அதிவெப்பமான ஆண்டாக 2024 ஆம் ஆண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
பிழைத்திருக்க வேண்டுமானால் உலகின் வெப்பநிலை உயர்வை குறைந்தபட்சம் 1.5 டிகிரிக்குள்ளாகவேனும் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நிபந்தனை 50 விழுக்காடு கார்பன் உமிழ்வுக் குறைப்பாக இருக்க வேண்டும். ஆனால் நாம் 1.3 விழுக்காடு கடந்த ஆண்டைவிட அதிகம் உமிழ்ந்திருக்கிறோம். 2025 இல் இன்னும் அதிகமாக உமிழ்வோம்.
இன்னொருபுறம், இவைகுறித்த எந்த பிரக்ஞையுமின்றி புத்தாண்டு வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்களென்று ஒவ்வொருவரும் நீடூழி வாழ ஆசி வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஷேர் மார்க்கெட் முதலீடுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் உச்சமாய் சாவுக்குக் கையளிப்பதற்காய் பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறொம்.
எவ்வளவு பெரிய முட்டாள்தனங்கள்?
மானுடகுலத்தின் பகுத்தறியும் திறன், அறிவியல் தொழில்நுட்பங்கள், சமூக – அரசியல் நிறுவனங்கள் அனைத்தும் 350 கோடி ஆண்டுகள் நீண்ட உயிரினங்களின் பரிணாமத் தொடர்ச்சியைத் தக்க வைப்பதில் மாபெரும் தோல்வியடைந்து வருகின்றன.
-ஜியோ டாமின்
- அத்பரா மற்றும் நீல நைல் எத்தியோப்பியாவில் தொடங்குகிறது.
- எகிப்தியர்கள் தங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.
பூமியிலேயே மிக நீளமான நதி, நைல் நதி.
நைல் நதி என்பது 11 ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய நைல் படுகையில் உள்ள நாடுகளை இணைக்கும் நீர்வழிப்பாதையாகும்:
தான்சானியா
உகாண்டா
ரவாண்டா
புருண்டி
காங்கோ ஜனநாயக குடியரசு
கென்யா
எத்தியோப்பியா
எரித்ரியா
தெற்கு சூடான்
சூடான்
எகிப்து
ஒரே ஒரு நைல் நதி இல்லை.. நைல் நதி வெள்ளை நைல், நீல நைல், அத்பரா என மூன்று முக்கிய துணைநதிகளைக் கொண்டுள்ளது.
வெள்ளை நைல் உலகின் மிகப் பெரிய வெப்பமண்டல ஏரியான விக்டோரியா ஏரியில் (தான்சானியா) இருந்து தொடங்குகிறது. இது தான் மிகப் பெரிய நதியும் கூட.
அத்பரா மற்றும் நீல நைல் எத்தியோப்பியாவில் தொடங்குகிறது.
உலகிலேயே வெப்பமான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் எகிப்து நைல் நதியில் துணை நதிகள் கலந்து முழுமையாக செல்லும் பாதையாக இருக்கிறது.
அந்த காலத்தில் ரெயில், கார் எல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் எகிப்துக்கு பயணிக்க மிக விரைவான வழியாக இருந்தது நைல் நதி.
விவசாயம் செய்யவே முடியாத எகிப்திய நிலம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நைலில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் விவசாயத்துக்கு ஏற்றதாகிறது. இதன் மூலம் எகிப்தியர்கள் தங்களுக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.
நாடோடியாக அழைந்து திரிந்த ஆதி மனிதக் கூட்டம் முதன் முதலாக ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கியது நைல் நதியில் தான் என்கின்றனர்.
இதற்கான காரணத்தை இப்போது செயற்கைக் கோள் அனுப்பும் படங்களில் கூட காண முடிகிறது. இந்த படத்தில் நைல் நதியை ஒட்டி மட்டும் பசுமைக் கட்டிப்பிடித்திருப்பது தெரியும்.
நைல் நதிக்கரையில் மட்டுமே அக்கால மனிதர்களுக்கு உணவும், தண்ணீரும் பிரச்சனையின்றிக் கிடைத்தது.
-தேவா
- பெண்வீட்டார்கள் வரதட்சணையை ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரித்து ₹150,000 வாங்கிவிட்டார்கள்.
- பெண்கள் முக்காடு போட்டுக்கொண்டு நடனமாடும் சடங்கு நடந்தது.
நைஜீரியாவில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுக்கவேண்டும்.
பேயெல்சோ மாநிலத்தை சேர்ந்த டேவிட் தன் நிச்சயதார்த்தவிழாவுக்கு ஐமோ மாநிலத்துக்கு சென்றான். டென்ட், மைக், உணவு என விழா செலவாக அவனிடம் ₹ 15 லட்சம் வாங்கப்பட்டு இருந்தது
கொடுக்கவேண்டிய வரதட்சணையாக ₹ 1 லட்சம் நிச்சயிக்கபட்டு இருந்தது. கல்யாணத்துக்கு முன்பே மணப்பெண்ணை கர்ப்பமாக்கியது தெரிந்ததால் கோபமடைந்த பெண்வீட்டார்கள் வரதட்சிணையை ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரித்து ₹150,000 வாங்கிவிட்டார்கள்
வீடு தெரியாமல் வேறு வீட்டுக்கு போய், சுற்றி அடித்துக்கொண்டு விழா அரங்குக்கு வந்து சேர்ந்தான். தாமதமாக வந்ததற்கு ₹10,000 பைன் போட்டர்கள். அதை கொடுத்தும், மணமகளின் உறவினர்கள் சிலர் கோபித்துக்கொண்டு கிளம்பி இருந்ததால் அவர்களை மீண்டும் வரவைக்க ஒரு ₹15,000 கொடுக்கவேண்டி இருந்தது
அதன்பின் 12 பெண்கள் முக்காடு போட்டுக்கொண்டு நடனமாடும் சடங்கு நடந்தது. அதில் இவன் மணப்பெண்ணை சரியாக கண்டுபிடிக்கவேண்டும். டேவிட் தப்பான பெண்ணை கைகாட்டியதால் அதற்கு ₹15,000 அபராதம் விதித்தார்கள்.
நிச்சயதார்த்தம் நடக்குமுன், பெரியவர்கள் கூடி "வரதட்சணை தனி. ஆனால் பெண்ணை பெற்று வளர்த்து, இத்தனை ஆண்டுகள் படிக்கவைத்து ஆளாக்கி இருக்கிறோம். அதற்கு ஒரு ₹850,000 தனியாக எடுத்து வை" என சொல்ல
"நிச்சயதார்த்த கதையே இப்படின்னா, இனி கல்யாணம் வேற இருக்கே" என யோசித்து கதிகலங்கிய டேவிட் பாத்ரூம் போவதாக சொல்லி மண்டபத்தை விட்டு வெளியேறி, பேயெல்சோ செல்லும் பேருந்தில் ஏறி, செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு, கண்கலங்கியபடி சென்றதாக அந்த வைரல் பதிவு தெரிவிக்கிறது
அமெரிக்கா, ஐரோப்பா சென்ற நைஜிரிய ஆண்கள் பலரும் "இங்கே வரதட்சிணை கொடுக்காமலேயே இந்த ஊர் பொண்ணுங்களை கல்யாணம் பண்ணிட்டோம்" என பதிவுபோட்டு உள்ளூர் ஆண்களை வெறுப்பேற்றுகிறார்கள்.
- நியாண்டர் செல்வன்
- தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்.
- “கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்” என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்...
"பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா
"இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..."
"சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல"
தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்...
"கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்...
அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது
"இது என்னங்க"
"மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க" என்கிறார் ஜீவா.
"மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"...
"அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா..
-காத்திக்
- உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்த ஊட்டி ரெயில் உள்ளது.
- ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்ல சுமார் ஐந்து அரை மணி நேரங்கள் ஆகும்.
"இந்தியாவில் மிக மெதுவாக ஒடும் ரெயில் எது தெரியுமா?
அது நம்ம நீலகிரி மலை ரெயில் தான்.
"Toy Train" என்று சொல்லப்படும் இந்த ரெயில் சேவை இந்தியாவில் சிம்லா, டார்ஜிலிங், ஊட்டி இந்த மூன்று ஊர்களில் மட்டுமே இருக்கின்றது.
"ஊட்டியில் இருந்து குன்னூர் வரை டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த ரெயில், குன்னூர் நிலையத்திலிருந்து டீசல் என்ஜினை ரிமூவ் செய்துவிட்டு பழைய கால நீராவி என்ஜினை இணைப்பார்கள், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இந்த ட்ரெயின் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படும்.
தண்டவாளங்களுக்கு நடுவே ஒரு பற்சக்கரம் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதன் மூலம் பிடித்து பிடித்து ரெயில் செல்வதால் மிகவும் மெதுவாக செல்லும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்ல சுமார் ஐந்து அரை மணி நேரங்கள் ஆகும். உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்த ஊட்டி ரெயில் உள்ளது.
பல உயரமான பாலங்களையும் பல குகைகளையும் கடந்து இந்த ரெயில் போவதால் நீங்கள் எத்தனை முறை பேருந்தில் பயணித்து இருந்தாலும் இந்த பாதை வழியே ஒருமுறை நீங்கள் பயணம் செய்யும்போது உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும், இந்த ரெயில் பயணம் செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பே புக் செய்திருக்க வேண்டும் அல்லது நீங்கள் அதிகாலை 6 மணிக்கு எல்லாம் ரெயில் நிலையத்தில் வரிசையில் நின்றால் அன்று போகும் ஏதோ ஒரு ரெயிலில் உங்களுக்கு டிக்கெட் கிடைக்கலாம்.
-கார்த்திக்
- இயற்கையை சற்று வளைக்கலாமே ஒழிய, ஜெயிக்க எல்லாம் முடியாது.
- இயற்கை 450 கோடி ஆண்டுகள் பழமையானது.
70-களில் "நாம் இருவர் நமக்கு மூவர்" என்றார்கள்.
அதன்பின் நாமிருவர், நமக்கிருவரானது.
அதுவும் ஜாஸ்தி என "நாம் இருவர் நமக்கொருவர்" என்றார்கள்.
அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மாமா, பெரியப்பா,, சித்தப்பா, அத்தை என எந்த உறவும் அமையும் வாய்ப்புகள் இல்லாமல் அந்த தலைமுறை பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள்.
இப்ப அந்த ஒற்றைப்பிள்ளை தான் என்னத்துக்கு என சொல்லி 'நாம் இருவர், நமக்கெதுக்கு இன்னொருவர்?" என்கிறார்கள்.
"நாம் இருவர்" என்பதே அதிகம். தனியா இருந்தாலே போதும். கல்யாணம் சுமை, விவாகரத்து செய்தால் சொத்து எல்லாம் போய்விடும், ப்ரிநூபிடல் அக்ரீமெண்டில் கையெழுத்து போடு என அந்த "நாம் இருவர்" கோட்பாடும் இன்னும் எத்தனை நாள் இருக்கும் என தெரியலை.
சரி தனியாவாச்சும் வாழலாம்னா "தனியா வாழ்ந்து என்ன பண்ணபோறே? வயசானபின் உன்னை யார் பார்த்துக்கொள்வார்கள்? வலியில்லாம தற்கொலை பண்ணிக்க" என சொல்லி கனடாவில் மருத்துவ தற்கொலையை அனுமதித்து சட்டமாக்கியுள்ளனர்.
இயற்கையை சற்று வளைக்கலாமே ஒழிய, ஜெயிக்க எல்லாம் முடியாது. இயற்கை 450 கோடி ஆண்டுகள் பழமையானது. நாம பூமியில் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் தான் ஆகின்றன. நாகரிக சமூகம் தோன்றி நூறாண்டுகள் தான் ஆகின்றன.
- நியாண்டர் செல்வன்
- எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக் கற்றுக்கொடுப்போம்.
- நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்.
ஒரு தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..
அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.
அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார். அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சுப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.
இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.
மீண்டும் மீண்டும் வருகிறார்.. முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.
ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..
வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..
பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே சிரமப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி குஞ்சுகள் வெளிவர ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..
மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...
சரி நாளை பார்ப்போம் என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...
இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.
சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன... பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...
இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..
அப்போது அந்த வழியாக தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...
நடந்ததைக் கூறினார்...
"பாவம் உன் அவசரத்தாலும் அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும் அந்த பறவைகளை அழித்து விட்டாயே"என்று நண்பர் கூறினார்...
"நானா ... "
"நீ தான்.. வேறு யாரு..."
அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் போதுஅதன் இறக்கைகள் மெதுவாக அசையும், கால்கள் துடிக்கும், முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..இது தானே இயற்கை..
அதை அப்படியோ விட்டிருந்தால் இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...
ஒரு இயல் பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..
அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்
தோட்டக்காரர் மீண்டும் உடைந்து போனார்..சிதறிப்போனார்..
இப்படித்தான் நாமும் நம் பிள்ளைகளுக்கு சிரமத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்... வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கிறோம்..
உழைப்பின் பெறுமதியை..
வியர்வையின் அருமையை..
வெற்றியின் தடங்களை..
உணரச் செய்யாமலேயே உருவாக்கி விடுகிறோம்...
எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக் கற்றுக்கொடுப்போம்..
பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக்கொடுப்போம்..
அவர்களுக்கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்..
நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..
பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும். அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..!
- பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்கு தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது.
- டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பு விளைவாக உருவாகியுள்ளது.
மரியானா ட்ரென்ச் (Mariana Trench) என்பது உலகில் உள்ள மிக ஆழமான கடற்பகுதியாகும். இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்கு தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது.
இந்த அகழியின் ஆழம் மிகவும் ஆழமான பகுதியில் சுமார் 10,984 மீட்டர் (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆகும். இந்த பகுதி Challenger Deep என்று அறியப்படுகிறது, இது மிகவும் ஆழமான புள்ளியாகும். இது கடலின் புவியியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அகழியாகும்.
இது டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பு விளைவாக உருவாகியுள்ளது. இதன் ஆழத்தில் அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கிறது, அதாவது சுமார் 1,086 பார் (15,750 psi) ஆக இருக்கிறது, இது கடல் மட்டத்தில் உள்ள பொது வளிமண்டல அழுத்தத்தை விட 1,071 மடங்கு அதிகம். இங்கு வெப்பநிலை 1 முதல் 4 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது.
மரியானா ட்ரென்ச் பற்றிய முதல் ஆய்வு 1872 முதல் 1876 வரை நடைபெற்றது, அப்போது இதன் ஆழம் அளக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டில், டொன் வால்ஷ் மற்றும் சாக் பிக்கார்ட் ஆகியோர் இந்த அகழியின் அடிப்பகுதிக்கு முதல் முறையாக சென்றனர், அதற்கு பிறகு சில வீரர்களும், ஆய்வாளர்களும் இங்கு சென்றுள்ளனர்.
இந்த அகழியின் ஆழத்தில் வாழும் உயிரினங்கள் மிகக் குறைவு, ஆனால் சில ஆழ்கடல் மீன்கள் மற்றும் வேறு சில உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.
-அனிதா
- ஒரு குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யவும் இயலும்.
- பிறவியிலேயே மிகுந்த புத்திக் கூர்மை உடையவர்கள்.
எந்த ஒரு பெண் மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து காலைக் கடனை முடித்து தலை குளித்து, விளக்கு ஏற்றி வீட்டு வாசலில் புள்ளி வைத்த பெரிய கோலம் போடுகிறார்களோ அவர்களுக்கு கர்பப்பை, நுரையீரல், செரிமான மண்டலம் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது.
நிறைய புள்ளிகள் வைத்து கோலம் போடும் பெண்களால் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யவும் இயலும்.
அதேசமயம் புதிதாக தீர்க்க முடியாத பிரச்சனையை உருவாக்கவும் முடியும். ஏனெனில் இவர்கள் பிறவியிலேயே மிகுந்த புத்திக் கூர்மை உடையவர்கள்.
ஆதலால் இவர்களை மணந்தவர்கள் இவர்களை நேர்மறை எண்ணங்களுடன் அணுகினால் இவர்களது ஆற்றலைக் கொண்டு ஆடவர்கள் உச்சத்தை அடைய முடியும் .
-முனைவர் பா. ஜெயப்ரசாத்






