search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தரசன்
    X
    முத்தரசன்

    வேலூர் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்- முத்தரசன் பேட்டி

    வேலூர் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

    நெல்லை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    பாராளுமன்றத்தில் பல சட்டங்களை பா.ஜ.க. அவசர கதியில் நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல மொழி பேசும் 125 கோடி மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். பா.ஜ.க. கொண்டு வரும் சட்டங்களினால் மதசார்பின்மை தன்மை கொண்ட நம்நாடு சிதையும் அபாயம் உள்ளது.

    மிக பெரிய எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அம்பேத்கார் உருவாக்கிய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நிலைக்குழு கமிட்டியை அமைக்கவில்லை. தேசிய கல்வி கொள்கையால் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். 22 மொழி பேசும் இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    மத்திய அரசு சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறது. தமிழக அரசு மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை. மத்திய அரசு சொல்வதை செய்கிறது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி 2017-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆண்டே அது திரும்பி வந்தது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசு கூறவில்லை.

    இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசு நிதி வரவில்லை. மேலும் சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு நிதி ரூ.3726 கோடியை தமிழக அரசு திருப்பி அனுப்பியுள்ளது. தமிழக அரசு செயல்படாமல் உள்ளது.

    நீட்

    மத்திய அரசு நினைத்தால் ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அவசர சட்டம் கொண்டு வரலாம். வருகிற 14, 15, 16-ந்தேதிகளில் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு கூட்டம் நடக் கிறது. இதில் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இதே போல் அக்டோபர் மாதம் நெல்லையில் 2, 3, 4-ந் தேதிகளில் மாதர் சங்கத்தின் தமிழக மாநாடு நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். அந்த தொகுதியில் சில பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல் பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×