என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெல்லும் - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    X

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெல்லும் - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

    திருப்பூரில் உள்ள பெருமாநல்லூரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100% வெல்லும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,   மக்களவை தொகுதி  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து  பேசியதாவது:

    மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பராயன் குறித்து எனக்கு தெரிந்ததை விட, கழக தலைவர் நன்கு அறிந்தவர். நான் கேட்டும் தர மறுக்கும் தலைவர், சுப்பராயன் கேட்ட திட்டங்களை மறுத்ததே இல்லை. அந்த அளவிற்கு நெருங்கிய நண்பராவார்.



    திருப்பூரிலே இப்போது கூடியிருக்கும் கூட்டம், பிரசார பொது கூட்டம் போல் அல்லாமல் மாநாடு போல் உள்ளது. சுப்பராயனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்வீர்கள் என நம்புகிறேன்.  இந்த திருப்பூர் அரசியல் மாற்றங்கள் பல கண்ட ஊர் ஆகும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் 100 சதவீதம் வெற்றி பெறும். பெரியாருடன் அண்ணாவை இணைத்த ஊர் இந்த திருப்பூர் தான்.

    தமிழன் தன்மானத்தோடு வாழ வித்திட்டது இந்த ஊர் தான். பனியனுக்கு உள்நாட்டு உற்பத்தி வரியை  ரத்து செய்தவர் தலைவர் கலைஞர். ஆனால் தன்னாட்சி அமைப்புகளை மோடி தற்போது மிரட்டி வருகிறார். கலைஞர் இருந்திருந்தால் இங்கு சுப்பராயனுக்காக வந்திருப்பார். அவர் இல்லாததால் அவரது மகனான நான் வந்து வாக்கு சேகரிக்கிறேன். மத்திய மாநில ஆட்சிகளின் அக்கிரமங்களை ஒழிக்க வேண்டும். இந்த பாராளுமன்ற தேர்தலோடு இணைத்து 18 தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    நியாயமாக 21 தொகுதிகளுக்கும் நடத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தேர்தல் நடத்தக்கூடாது என்பது இல்லை. ஆனால் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.  சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என முறையிட்டோம். உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு தேதி அறிவிக்க உத்தரவிட்டது, ஆனால் இன்னும் தேதி அறிவிக்கவில்லை.

    திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்கவே இடைத்தேர்தல் நடத்தவில்லை. மேலும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் திடீரென சோதனை செய்தது கூட தேர்தலில் திமுக வெற்றி பெற கூடாது என்பதற்காகதான். எனக்கு இன்னும் சந்தேகம் என்னவென்றால், அவர்களே எங்கோ இருந்து எடுத்து கொண்டு வந்து, பணத்தை வைத்து விட்டு துரைமுருகன் தான் காரணம் என சொல்கிறார்களோ  என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019  
    Next Story
    ×