என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறை அருகே மாலை நேரங்களில் ஊருக்குள் சுற்றி வரும் காட்டு யானைகள்
- உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு சில நேரங்களில் உணவிற்காக வீடுகளையும் சேதப்படுத்துகின்றன.
- வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வடவள்ளி,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு சில நேரங்களில் உணவிற்காக வீடுகளையும் சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில் ஆலாந்துறையை அடுத்த சின்னாற்று பகுதியில், மாலை நேரத்தில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் சுற்றி வந்துள்ளன.
இதனை பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்து யானை வரும் பாதையில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் யானை ஊருக்குள் சுற்றி வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வழக்கமாக இரவு நேரங்களில் ஊருக்குள் வரும் யானைகள் தற்போது மாலை நேரங்களிலும் ஊருக்குள் வருவதால் பொதுமக்களும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் நாள்தோறும் அப்பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.






