என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். கார்டு கொடுக்காததால் பெண்ணை தாக்கிய கணவர்
- விருதுநகரில் ஏ.டி.எம். கார்டு கொடுக்காததால் பெண்ணை கணவர் தாக்கினார்.
- பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
மதுரையை சேர்ந்தவர் மகேஷ்ராஜா. இவருக்கும், விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த வெள்ளையம்மாள் (வயது33) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்வது என முடிவு செய்தனர். இது தொடர்பான குடும்ப நல வழக்கு விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அவர்களது உத்தரவின்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் இருவரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருவரும் அதற்கு உடன்பட்டு மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ தொடங்கினர்.
சம்பவத்தன்று மகேஷ்ராஜா மனைவியிடம் ஏ.டி.எம். கார்டை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. சேர்ந்து வாழும்போது ஏன் ஏ.டி.எம். கார்டு கொடுக்க மறுக்கிறாய்? எனக்கேட்டு மனைவியிடம் மகேஷ்ராஜா வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மகேஷ்ராஜா மனைவியை அடித்து கீழே தள்ளினார். மகேஷ்ராஜா வின் தாய் பவுன்தாயும் உடன் சேர்ந்து வெள்ளை யம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் வெள்ளையம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






