என் மலர்tooltip icon

    வேலூர்

    துப்புரவு ஊழியர்கள் வீடு வீடாக குப்பை சேகரிக்கா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சைதாப் பேட்டையில் இன்று காலை குப்பைகள் கொட்டுவதால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். 

    இதேபோல் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்வாய்களிலும் காலி இடங்களில் குப்பைகளை கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    வேலூர் சேண்பாக்கம் பகுதியில் இன்று காலை மேயர் சுஜாதா மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது மாநகராட்சி ஊழியர்கள் சரியாக வீடுவீடாக வந்து குப்பைகள் சேகரிப்பது இல்லை. இதனால் பலர் தெருக்களில் குப்பைகள் கொட்டுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட இது காரணமாக அமைகிறது என புகார் தெரிவித்தனர்.

    அப்போது கமிஷனர் அசோக்குமார் மாநகராட்சியில் துப்புரவு ஊழியர்கள் கண்டிப்பாக வீடு வீடாக சென்று தினந்தோறும் குப்பைகளை சேகரிக்க வேண்டும்.குப்பைகள் சரியாக சேகரிக்காத தெருக்களில் மட்டுமே பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுகின்றனர்.

    சுகாதார அலுவலர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வீடு வீடாகச் சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடாத துப்புரவு ஊழியர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்பு வீடுகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    குடியாத்தம்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளை அகற்றும் பணிகள் குறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    அந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், நீர்வள ஆதாரதுறை செயற்பொறியாளர் ரமேஷ், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் நகர்மன்ற உறுப்பினர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பொதுமக்கள் சார்பில் நகர மன்ற உறுப்பினர் தண்டபாணி கோரிக்கை விடுத்தார்.

    அதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது-வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள நீர்வழி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நீதிமன்ற ஆணை மற்றும் தமிழக அரசு உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டது தற்போது 675 வீடுகள் அகக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

     மேலும் 600க்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட வேண்டி யுள்ளது குடியாத்தம் நெல்லூர் பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை இடிக்க கால அவகாசம் கேட்டுள்ளனர் கால அவகாசம் அளிப்பதற்கு வாய்ப்பு இல்லை நீதிமன்றத்தில் அறிவுறுத்தல் படியே இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. 

    ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் கால அவகாசம் வழங்கப்படாது மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க மாறு மின் வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக வீட்டுமனை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதற்கான இடங்கள் பார்வையிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு மனைகளில் குடியிருப்புகள் கட்டித்தர அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    சீனியாரிட்டி அடிப்படையில் இங்கு குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை மற்றும் அதில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் அதற்காக அப்பகுதியில் உண்மையாக வீட்டுமனை இல்லாதவர்கள் கணக்கெடுக் கப்பட்டு அவர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் படையெடுக்கும் பாம்புகளால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலங்கார செடிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எப்போதும் பூட்டியே கிடக்கும் இந்த பூங்கா பகுதியில் தற்போது பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் செடி, கொடி மற்றும் மண்டிக்கிடக்கும் புதர்களில் வசித்த பாம்புகள் அருகில் உள்ள கட்டிடங்களை நோக்கி படையெடுக்கத் தொங்கியுள்ளன.

    கடந்த வாரம் நாகபாம்பு ஒன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆவின் டீக்கடை அருகே பட்டப்பகலில் உலா வந்தது. 

    இதனைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பொது மக்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்த பூங்கா பகுதிக்குச் சென்று விட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் முன் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் இரவு பாம்பு ஒன்று அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. 

    நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் போர்ட்டிகோ பகுதிவரை நாகபாம்பு ஒன்று வேகமாக வந்தது.

    அங்கிருந்த பெண் போலீசாரை பார்த்ததும் நாகபாம்பு போர்டிகோ ஒட்டியுள்ள சிறிய கால்வாய்க்குள் சென்று விட்டது. 

    இதேபோல பி' பிளாக் நுழைவாயில் அருகிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீளமான பாம்பு ஒன்று சுற்றித் திரிந்ததை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்தனர். 

    கலெக்டர் அலுவலக பூங்காவில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக பூங்கா பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மாலை 6.30 மணிக்கு பிறகு பலர் வீடுகளுக்கு திரும்புகின்றனர். தற்போது மாலை நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அவர்கள் அச்சமடைந் துள்ளனர். 

    ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் முன்பு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    குடியாத்தம் பகுதியில் மழைநீர் வடிகால் உள்பட அடிப்படை வசதிக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து நகர சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் முதல் கூட்டம் நேற்று மாலையில் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. 

    நகரமன்றத் துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் முக்கியமான அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் கட்டுதல், கல்வெட்டு அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில்:-

    குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கொசுக்கள் அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும், நகரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள், பன்றிகள், குரங்குகள் அதிக அளவில் உள்ளன அதை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பல மாதங்களாக வரவில்லை. 

    உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பல பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது.

    போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கால்வாய் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

    துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் கூடுதலாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு ஒன்றிய பகுதிகளில் வரிவசூல் செய்யப்பட்டுள்ள.

    அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நிலுவையிலுள்ள வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் பகுதியின் முக்கிய பிரச்சினையான ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்  என உறுப்பினர்கள் பேசினார்கள்.

    மேலும் அத்தியாவசிய பணிகள் குறித்து நகர் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. வரவேற்றும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காதீர்கள் என ஆட்டோ டிரைவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூரில் இளம் பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    இதில் ஏ.டி.எஸ்பி சுந்தரமூர்த்தி பேசியதாவது:-

    வேலூர் மாநகர பகுதியில் இரவு நேரங்களில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. நகரப்பகுதியில் 24 மணி நேரமும் ஆட்டோக்கள் ஓடுகிறது.

    இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டக் கூடிய டிரைவர்கள் தங்களுடைய முகவரி புகைப்படம் செல்போன் எண் உள்ளிட்டவற்றை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். 

    மேலும் ஆட்டோக்களில் செல்போன் எண் போட்டோவுடன் கூடிய முகவரியை பொறுத்திருக்க வேண்டும்.

    உங்கள் ஆட்டோவில் வரும் பயணிகளை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சேவை செய்ய வேண்டும். மக்கள் ஆட்டோ டிரைவர்களை தான் முழுமையாக நம்பி இருக்கின்றனர். 

    முகவரி கூட உங்களைப் பார்த்து தான் கேட்கிறார்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையை வீணடித்து விடாதீர்கள்.ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை ரகசியமாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் டி.எஸ்.பி.க் கள் பழனி ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     ஆட்டோ டிரைவர்கள் ஆவேசம்

    கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்டோ டிரைவர்கள் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் பேசுகையில் குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகிறோம். 

    ஒரு சிலர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.தங்களது வீட்டில் உள்ளவர்களை போல் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். 

    வேலூரில் ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.
    வேலூரில் இரவு நேர ஆட்டோக்களில் தீவிர சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூரில் கடந்த 17-ந் தேதி இரவு காட்பாடியில் உள்ள தனியார் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த பெண் மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பரை பயணிகள் ஆட்டோ என கூறி கடத்தி சென்று பணம், நகை, செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு, அப்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன், கூலி தொழில் செய்யும் மணிகண்டன், பாலா என்கிற பரத், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர். 

    அவர்களில் 4பேரை மத்திய சிறையிலும், சிறுவனை சென்னை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் இரவு நேரம் முழுவதும் வாகனம் மற்றும் பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க எஸ்.பி ராஜேஷ் கண்ணண் உத்தரவிட்டார்.  வேலூர் மாநகரம் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரமாக்கப்பட்டன. 

    மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டு அவ்வழியாக வரும் வாகனங்களை குறிப்பாக பயணிகள் ஆட்டோக்களை சோதனை செய்து உரிய ஓட்டுனர் உரிமம் இல்லதாவர்கள், வாகன உரிமம் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    மேலும் ஆட்டோ ஓட்டி வருவோரின் முழு விவரம், பயணிப்போரின் விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி ஆட்டோவில் சும்மா சுற்றி வந்த நபர்களையும் காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

     இது போன்ற இரவு நேர கண்காணிப்பு தொடரும் என்றும் சந்தேகப்படியான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் தெரிவித்துள்ளார்.
    வேலூரில் இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பலாத்காரம் செய்த காமுகர்கள் 5 பேரில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் காட்பாடியில் திருவலம் ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட தியேட்டரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இரவு காட்சி சினிமா பார்க்க சென்றனர்.

    படம் முடிந்து இரவு 1 மணிக்கு 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட மர்மநபர்கள் 5 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்தனர்.

    ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறினர்.

    இது ஷேர் ஆட்டோ தான் நீங்கள் ஏறுங்கள் என டிரைவர் கூறினார்.

    இதனை கேட்டதும் இருவரும் ஆட்டோவில் ஏறினர்.

    காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது.

    அங்கிருந்து பாலாற்றின் கரைக்கு கடத்திச்சென்று இருவரையும் தாக்கினர். அவர்களிடம் 2 பவுன் நகை, ஏ.டி.எம். கார்டுகள் செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும் ஆண் ஊழியரை 2 பேர் ஆட்டோவில் அழைத்து சென்று வேலூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் அவர்களது கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.40,000 பணம் எடுத்தனர்.

    மீண்டும் பாலாற்றங்கரைக்கு சென்ற அவர்கள் பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். பெண் ஊழியர் பணம் நகையை எடுத்து விட்டீர்கள். தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் என கெஞ்சி கேட்டும் இந்த கும்பல் கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் மிருகத்தனமாக நடந்துள்ளனர்.

    கும்பல் விடுவித்த பின்னர் இருவரும் அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு திரும்பியுள்ளனர். அவர்களிடம் பறித்த பணத்தைக்கொண்டு கும்பல் 5 பேரும் சேர்ந்து உல்லாசமாக செலவு செய்தனர். புதிதாக ஆடைகள் வாங்கி ஆடம்பரமாக சுற்றித் திரிந்தனர்.மேலும் உயர் ரக மதுபானங்கள் வாங்கி குடித்தனர்.

    இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் போதையில் 2 வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது தான் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் பறிமுதல் செய்த பணத்தை பங்கீடு செய்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது.

    அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களை கடத்திச் சென்று பணம் நகை பறித்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஆன்லைன் மூலமாக வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் அந்த கும்பலை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் மீது ஆயுதங்களுடன் சேர்ந்து அச்சுறுத்துவது, கடத்தி சிறை வைப்பது, கட்டாயப்படுத்தி கடத்தியது, அடைத்து வைப்பது, கூட்டு பலாத்காரம், தொடர் குற்றங்களில் ஈடுபடுவது, கூட்டுக் கொள்ளை, ஆயுதம் வைத்து மிரட்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தடயங்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    வேலூரில் இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பலாத்காரம் செய்த காமுகர்கள் 5 பேரில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    இந்த கும்பல் இவ்வளவு துணிச்சலுடன் முதன்முறையாக கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை. இதற்கு முன்னதாக இதே போல் மேலும் பெண்களை கடத்தி பலாத்காரம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து அவர்களது செல்போன்களில் வீடியோக்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் இரவு நேரம் தனியாக ஆட்டோவில் செல்லும் பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்யும் கும்பல்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் சதுப்பேரி உபரி நீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ள 150 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக சதுப்பேரி ஏரி முழுமையாக நிரம்பியது.ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் கால்வாயை ஆக்கிரமித்து கொணவட்டம் பகுதியில் ஏராளமானோர் வீடு கட்டியுள்ளனர்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக இருந்து ஏரி உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஏரியில் இருந்து உபரிநீர் எளிதாக வெளியேறும் வகையில் உபரிநீர் கால்வாயை சீரமைக்க வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.

    இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள சுவர்கள் எதுவும் இடிக்கப்படவில்லை.

    இதனையடுத்து இன்று காலை தாசில்தார் செந்தில் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணி தொடங்கியது.

    இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பகுதியில் கட்டியுள்ள வீடுகளுக்கு மாநகராட்சியில் வரியை செலுத்தி வருகிறோம். மேலும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    மின் கட்டணமும் முறையாக செலுத்தி வருகிறோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வீடுகளின் சுவர்களை இடிக்கக் கூடாது என அவர்கள் கூறினர். சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி நடந்தது.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில்:-

    சதுப்பேரி ஏரி உபரிநீர் கால்வாய் 110 அடி அகலம் கொண்டது. இந்த கால்வாய் தற்போது 25 அடியாக சுருங்கிவிட்டது. கால்வாயை ஆக்கிரமித்து இதுவரை சுமார் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 

    ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

    தொடர்ந்து அனைத்து ஆக்கிரமிப்பு வீடு கட்டிடங்கள் இடிக்கப்படும் என்றனர்.
    வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் இன்று நடந்தது. 

    எல்.பி.எப் பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் ராமதாஸ் தமிழ்ச்செல்வன் சிகாமணி பாரதிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

    வரும் மார்ச் 28,29 தேதிகளில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்து பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. 

    இதுகுறித்து வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
    சத்துவாச்சாரியில் 32 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    சாலை பணிகளை துரிதப்படுத்தி அனைத்து தெருக்களையும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
    இதற்காக ஒவ்வொரு மண்டல வாரியாக ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

    இன்று காலை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் சத்துவாச்சாரி 18-வது வார்டு பகுதியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் தென்றல் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அங்குள்ள தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

    அதனை சீரமைத்து அனைத்து தெருக்களிலும் சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி 18-வது வார்டு பா.ஜ.க.கவுன்சிலர் சுமதி மனோகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-

    சத்துவாச்சாரி பகுதியில் 32 இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் தண்ணீர் வீணாக செல்கிறது. தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.

    இதனை உடனடியாக சீரமைக்க உத்தரவிட பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு மண்டலங்களிலும் நடைபெற பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் ஆலோசனை செய்யப்பட்டு முழுமையாக அனைத்து தெருக்களும் சீரமைக்கப்படும் என்றார்.
    வேலூரில் விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள செம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 18-ந்தேதி காட்பாடி கசத்தை அடுத்த உள்ளிபுதூர் கூட்ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டது. 

    பலத்த காயமடைந்த அவரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நேற்று கலையரசனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இவரது உறவினர்கள் கலையரசனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    அவரது இருதயத்தின் வால்வுகள் போர்டிஸ் லைப் லைன் மருத்துவமனைக்கும், கல்லீரல் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் மற்றும் கண் ஆகியவை மற்ற மருத்துவமனைகளுக்கு தானமாக பெறப்பட்டது.
    குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் ரூ.13.10 கோடி நகை கடன் தள்ளுபடி சான்று பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் தமிழக அரசு அறிவித்த பொது நகை கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் 5 சவரன் நகைகளுக்கு கீழ் அடகு வைத்த 4 ஆயிரத்து 462 பேருக்கு ரூ.13 கோடியே 10 லட்சத்து 59ஆயிரத்து 458 கான நகை கடன் அசல் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனையடுத்து நகை கடனுக்கான அசல் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி குடியாத்தம் கூட்டுறவு நகர வங்கியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வங்கியின் மேலாண்மை இயக்குனரும் வேலூர் சரக துணை பதிவாளர் கோ.அருட்பெருஞ்ஜோதி தலைமை தாங்கினார். 

    வங்கியின் துணைத் தலைவர் எஸ்.என்.சுந்தரேசன், உறுப்பினர்கள் எஸ். சம்பத்குமார், எஸ்.ஐ.அன்வர்பாஷா, ஜி.ஜெயக்குமார், கவிதாபாபு, ஆர்.சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    வங்கியின் பொது மேலாளர் கே.அருள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நகை கடன் அசல் மற்றும் வட்டி தள்ளுபடி காண சான்றிதழ்களை வங்கி தலைவர் எம்.பாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார். 

    இந்நிகழ்ச்சியில் வங்கியின் இயக்குனர்கள், வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×