என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காதீர்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வீணடிக்காதீர்கள் என ஆட்டோ டிரைவர்களுக்கு ஏ.டி.எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:
வேலூரில் இளம் பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் ஏ.டி.எஸ்பி சுந்தரமூர்த்தி பேசியதாவது:-
வேலூர் மாநகர பகுதியில் இரவு நேரங்களில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. நகரப்பகுதியில் 24 மணி நேரமும் ஆட்டோக்கள் ஓடுகிறது.
இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டக் கூடிய டிரைவர்கள் தங்களுடைய முகவரி புகைப்படம் செல்போன் எண் உள்ளிட்டவற்றை போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ஆட்டோக்களில் செல்போன் எண் போட்டோவுடன் கூடிய முகவரியை பொறுத்திருக்க வேண்டும்.
உங்கள் ஆட்டோவில் வரும் பயணிகளை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து சேவை செய்ய வேண்டும். மக்கள் ஆட்டோ டிரைவர்களை தான் முழுமையாக நம்பி இருக்கின்றனர்.
முகவரி கூட உங்களைப் பார்த்து தான் கேட்கிறார்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையை வீணடித்து விடாதீர்கள்.ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்த விவரங்களை ரகசியமாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் டி.எஸ்.பி.க் கள் பழனி ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டோ டிரைவர்கள் ஆவேசம்
கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்டோ டிரைவர்கள் பயணிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் ஒருவர் பேசுகையில் குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி வருகிறோம்.
ஒரு சிலர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.தங்களது வீட்டில் உள்ளவர்களை போல் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்.
வேலூரில் ஆட்டோவில் இளம்பெண்ணை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பலை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.
Next Story






