என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பாலாறு அன்னை ரத யாத்திரையை சக்தி அம்மா தொடங்கி வைத்தார்.
    வேலூர் :

    வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரத யாத்திரை தொடக்கவிழா வேலூர் தங்கக்கோவிலில் இன்று நடைபெற்றது. 

    சத்திஅம்மா தலைமை தாங்கி ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்று அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு வருகிற 16-ந்தேதி வருகை தர உள்ளது.

    பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி, ஆம்பூர், ஆற்காடு, காஞ்சிபுரம், வாலாஜாபாத், கடலூர் சின்ன குப்பத்தில் சென்று ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. பாலாறு செல்லும் இடங்களில் மொத்தம் 21 நாட்கள் ரதயாத்திரை நடைபெறுகிறது.

    இந்த ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி பீட மேலாளர் சம்பத் மற்றும் கோரஷானந்தா சரஸ்வதி, மோகானந்த சரஸ்வதி மற்றும் பாலாறு பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினர், நாராயணி பீடம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அகில பாரதீய சந்நியாசிகள் சங்கமும், நாராயணி பீடமும் இணைந்து செய்திருந்தனர்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் மோப்பநாய் கொண்டு போலீசார் சோதனை நடத்தினர்.
    குடியாத்தம் :

    வேலூர் மாவட்டம் மோப்ப நாய் பிரிவினர் மோப்பநாய் அக்னியுடன் கெங்கையம்மன் கோவிலில் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் மோப்பநாய் கொண்டு கோவிலின் வளாகத்தில் உள்ள பகுதிகளில் சோதனை செய்தனர்.

    தொடர்ந்து காவல் துறையினரின் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மெட்டல்டிடெக்டர் கருவி மூலம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். 

    போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தபோது கோவிலில் இருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    வேலூர் சத்துவாச்சாரியில் அரசு பள்ளி வளாகத்தில் நல மையம் கட்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு ெதரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரில் நகர் நல மையம் கட்டப்பட உள்ளது. இதற்காக நேரு நகர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்திருந்தனர். 

    இன்று காலை மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி, இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளி வளாகத்தில் ஏற்கனவே போதுமான இடவசதி இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டுவதற்குக் கூட இடம் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடக்கூடிய இடத்தில் நலமையம் கட்டுவது ஏற்புடையது அல்ல. 

    மேலும் இதன் மூலம் நோய் பரவும் வாய்ப்புள்ளது எனவே நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நல மையம் கட்ட கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

    இதுபற்றி தகவலறிந்த அப்பகுதி பொதுமக்களும் அங்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

    இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மற்றொரு இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நடுநிலைப்பள்ளி வளாகத்தில்நல மையம் கட்டுவதற்கு அந்த பகுதி பொதுமக்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நேரு நகர் சத்துணவு மைய வளாகத்தில் நல மையம் கட்ட முடிவு செய்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போதையில் உள்ளாடையுடன் சுற்றி தனியார் பஸ் டிரைவர் ரகளையில் ஈடுபட்டார்.
    வேலூர்:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகின்றது.

    கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து வெளியூர் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்துக்குச் சென்றுதான் புறப்படுகின்றன. சென்னை, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமே புதிய பஸ் நிலையத்துக்கு வந்துச் செல்கின்றன. 

    இதனால், பயணிகள் நடமாட்டம் குறைவாக உள்ளது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்கள் சிலர் பஸ் நிலையத்தின் ஒருப்பகுதியிலுள்ள கோவிலின் பின்புறம் தங்கி உறங்குகிறார்கள்.

    வெளிச்சம் குறைவாக இருப்பதால் போதை ஆசாமிகளும் அங்குச் சுற்றுகிறார்கள். இரவு நேரங்களில், போலீஸ் பஸ் நிலையத்துக்குள் ரோந்து வருவது கிடையாது.

    இந்த நிலையில், வேலூரிலிருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் தனியார் பஸ் பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ், இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருத்தணி புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. 

    இரவு ஓட்டி வந்த டிரைவர், மாற்று டிரைவரிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்படாமல், பஸ் நிலையத்துக்குள்ளேயே அமர்ந்து மது குடித்தார்.

    பின்னர், சட்டை, பேண்ட்டை கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையுடன் பஸ் நிலையத்துக்குள் சுற்றினார். உள்ளாடையுடன் மதுபோதையில் பஸ் நிலையத்துக்குள் ஓவர் அலப்பறையில் ஈடுபட்டுகொண்டிருந்தார். இதனால், அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற பெண்களும், முதியவர்களும் அவதிக்குள்ளாகினர். சென்னை பஸ்சுக்காக காத்திருந்த பெண் பயணிகளும் முகச் சுளிப்புக்கு ஆளாகினர்.

    பஸ் நிலையத்தில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஆபாசமாக நடந்து கொள்ளும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது.
    வேலூர்:

    சர்வதேச அருங்காட்சியக தினமான மே 18 -ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6 -ம் வகுப்பு முதல் 9 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்காக வருகிற 18-ந் தேதி திறன் ஊக்க பயிற்சி முகாம் வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடத்தப்பட உள்ளது.

    பள்ளி மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு, அடிப்படை ஓவியம், வண்ண ஒவியம், ஓவியங்களின் வகைகள், பயனற்ற பொருட்களை கலைப்பொருட்களாக மாற்றுதல், வாழ்த்து அட்டை தயாரித்தல் உள்ளிட்ட திறன் ஊக்க பயிற்சி ஓவிய ஆசிரியர்களால் வழங்கப்பட உள்ளது. 

    ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவ- மாணவிகள் வருகிற 17-ந் தேதிக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    நஞ்சுகொண்டாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இதையொட்டி கடந்த 48 நாட்களாக யஜமானர் சங்கல்பம், பிராத்தனா சீக்தம் புண்யாஹம், அக்னி பிரதிஷ்டை, கோ பூஜை, ஹோமம் மகா பூர்ணாஹீதி உள்ளிட்ட பூஜைகள் ஆஞ்சநேயருக்கு செய்யப்பட்டது. 

    கும்பாபிஷேக விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். 

    ஊர் பெரியதனம் மாணிக்கவேலு, துணை தலைவர் கன்னியப்பன், ஒன்றிய கவுன்சிலர் நதியாபுருஷோத்தமன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தருமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராம்ராஜ் வரவேற்றார். 

    காலை 6 மணி முதல் 7 மணி அளவில் அபய ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
    வேலூர்:

    மனித நாகரீக வளர்ச்சியில் குற்றங்களின் வளர்ச்சியும் பரிணாமம் அடைந்துள்ளது. கையில் பணம் இருந்தால் பாதுகாப்பு இல்லை என வங்கியில் செலுத்தி வந்தனர்.

    ஆனால் தற்போது வங்கிக்கணக்கில் உள்ள காசு பாதுகாப்பாக இருக்குமா? என்று மக்கள் யோசிக்கும் அளவுக்கு இணைய குற்றங்கள் அதிகரித்துள்ளன. டிஜிட்டல் யுகத்தில் கத்தியை காட்டாமல் பணத்தை அபகரிக்கும் மர்மநபர்கள் அதிகரித்துள்ளனர். அவர்களை பிடிப்பதும் காவல்துறைக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இணையகுற்றங்களால் ஏராளமாக மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அவர்கள் இழந்த பணத்தை மீட்க வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    அதேவேளையில் பணத்தை பறிகொடுக்காமல் தடுப்பதற்கான விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகின்றனர். காலத்துக்கு ஏற்றார்போல் மர்மநபர்கள் புதுப்புது வடிவங்களில் பணமோசடியில் ஈடுபடுகின்றனர்.

    தற்போது புதியமாக உருவெடுத்துள்ள இணையதள மோசடி குற்றங்கள் குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    வங்கியில் இருந்து பேசுவதாக மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி விவரங்களை பெற்று வங்கியில் உள்ள பணத்தை அபகரித்து வருகின்றனர். 

    இதுகுறித்து மக்களுக்கு ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதால் தற்போது புதுப்புது வடிவங்களில் கணினி மென்பொருள் தெரிந்த மர்மநபர்கள் மக்களின் பணத்தை நொடியில் பறித்து விடுகின்றனர். இவர்களிடம் இருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    தற்போது உடனடியாக கடன் வழங்கப்படும் என்ற ஆப்கள் (செயலி) பலவகை வந்துள்ளது. இதில் பெரும்பாலான ஆப்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆவணங்கள் இன்றி கடன் தருவதாக குறுந்தகவல் செல்போனுக்கு அனுப்புகிறார்கள். அதனுடன் ஒரு இணைய தள ஆப் லிங்கையும் அனுப்பி வைப்பார்கள். 

    அதை நம்பி நீங்கள் லிங்கில் சென்று செல்போனில் ஆப்பினை பதிவிறக்கம் செய்தால் உடனே உங்களது செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பார்த்து அதை திருடி வைத்துக் கொள்வார்கள். அவர்கள் வழங்கும் கடன் தொகையினை நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த வேண்டும் நிர்பந்தம் செய்வார்கள்.

    நீங்கள் செலுத்த தவறினால் உங்களது செல்போனில் உள்ள எண்களுக்கு உங்களை பற்றி தவறான குறுந்தகவல் அனுப்புவார்கள். உங்களது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவார்கள். பெற்ற கடனுக்கு பல மடங்கு வட்டியும் சேர்த்து அதிக தொகை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். எனவே இதுபோன்ற கடன் ஆப்களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

    மேலும், பகுதி நேர வேலை பார்த்து அதிகம் சம்பாதிக்கலாம் என்று வரும் குறுந்தகவலையும் நம்பி ஏமாற வேண்டாம். அதை நம்பி செல்போனில் அவர்கள் அனுப்பும் ஆப்களை பதிவிறக்கம் செய்தால் தங்களது விவரங்கள் திருடப்படும்.

    பின்னர் உங்களை மிரட்டி பணம் பறிப்பார்கள். இதுபோன்ற நம்பகத்தன்மை இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது நல்லது. ஆன்லைனில் பல்வேறு நிறுவனங்களில் வாடிக்கையாளர் மைய எண்கள் போலியானதாகவே உள்ளது. 

    எனவே ஆன்லைனில் வரும் நம்பகத்தன்மையற்ற வாடிக்கையாளர் மைய எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (வயது 60). இவர் இன்று காலை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அலுவலகம் முன்பு திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

    அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    டோல்கேட் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணிடம் ரூ.60 லட்சம் பணம் மற்றும் 80 பவுன் நகை கொடுத்தேன். அதனை வாங்கிக் கொண்டு அவர் தர மறுக்கிறார்.

    இதுபற்றி போலீசில் புகார் அளித்தால் பணம்-நகை கொடுத்ததற்கு சாட்சி உள்ளதா என கேட்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.

    எனவே போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய வந்தேன் என்றார்.

    இதனையடுத்து ராஜேந்திரசிங்கை சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மாவட்ட அளவில் மிகவும் புகழ் பெற்றது.

     வேலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய தேர்களில் கருப்புலீஸ்வரர் தேரும் ஒன்று சுமார் 42 அடி உயரம் கொண்ட இந்த தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். 

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் மாலை வரை கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் தேரோட்டம் அதன் நிலையிலே பூஜைகள் செய்து நடைபெற்றது.

    2ஆண்டுகளுக்குப் பிறகுஇந்தாண்டு தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி தேர் திருவிழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் விழா கமிட்டி சார்பில் செய்யப்பட்டு இருந்தது. 

    நேற்று காலையில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர்  கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கருப்புலீஸ்வரர்- சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து தேர் நிலை வரை பக்தர்களுடன் கொண்டுவரப்பட்டு தேரில் எழுந்தருளிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

    தேரோட்டத்தை குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன் குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, தாசில்தார் லலிதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஜி.எஸ். அரசு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.பாஸ்கர், அரசு வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார், தேர் கமிட்டி தலைவர் எம்.எஸ். அமர்நாத், கௌரவ தலைவர் வி. பிச்சாண்டி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    42 அடி உயரமும் பல டன் எடை கொண்ட இந்த தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் மாவிளக்கு கொண்டுவந்து தீபாராதனை செய்தனர், நேர்த்தி கடனுக்காக மிளகு மற்றும் உப்பு தேரின் மீது வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
     
    பக்தர்கள் வசதிக்காக பல இடங்களில் அன்னதானமும், தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    குடியாத்தம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி தலைமையில் மின் பணியாளர்கள் வழிநெடுகிலும் தேர் செல்லும் பாதைகளில் உள்ள மின்சார கம்பிகளை துண்டித்து தேர் செல்ல வழிவகை செய்தனர்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் விஜயா கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு உள்பட திருத்தேர் கமிட்டியினர், இளைஞர் அணியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் ஓடும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது.
    வேலூர்:

    நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் சாலைகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சாலைகளை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் எண்ணிக்கை செய்யப்படுகிறது. அதற்கேற்ப சாலைகள் மேம்பாலங்கள் மேம்படுத்தி வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பு காரணமாக இந்த பணிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள், பாலங்கள் மற்றும் சந்திப்புகளில் வாகனங்களை எண்ணும் பணியில் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும் என்பதால், முக்கிய வழித்தடங்கள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து ஓட்டத்தை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற ஆய்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்பட வேண்டும்.

    சுழற்சி முறையில் தொழிலாளர்கள் மூலம் எண்ணும் பணி 24 மணி நேரமும் நடக்கிறது. இது போன்ற நடவடிக்கை போக்குவரத்து போலீசார், வேலூர் நகரின் முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் செல்வதை சீராக்க உதவுகிறது.

    வேலூர் நெடுஞ்சாலைத் துறையால் பணியமர்த்தப்பட்ட இளம் பணியாளர்கள் சாலைகளில் ஓடும் வாகனங்கள் கணக்கெடுத்து வருகின்றனர். கார்கள், பஸ்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ வகைகளை சாலையோரங்களில் குழுவாக அமர்ந்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் மட்டும், 1,060 கிலோமீட்டர் துாரம் கொண்ட, 140-க்கும் மேற்பட்ட சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் குழுக்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    இந்த மாவட்டங்களில் 450 சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் மேம்படுத்துவது பாலங்கள் உறுதித்தன்மை ஆய்வு செய்து புதிய பாலங்கள் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
    வேலூர் புதிய பஸ் நிலைய பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
    வேலூர்:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு முதல் தளத்தில் வணிக வளாகம், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் செங் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

    இந்த நிலையில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பஸ் நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்:-

    பஸ்நிலையத்தில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வண்ணம் தீட்டும் பணி மற்றும் மின்விளக்குகள் பொருத்தும் பணி குடிநீர் குழாய்கள் இணைப்பு பணி உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

    செல்லியம்மன் கோவில் வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 998 சதுர மீட்டர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை மீட்பது அல்லது அதற்கு பதிலாக பஸ் நிலையம் முன்பு உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை பெறுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள வீரபத்ரசாமி கோவிலை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள சாமி சிலையை புதிதாக முத்து மண்டபம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கோவிலில் பிரதிஷ்டை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    புதிய பஸ் நிலைய பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைப்பார் என்றார்.

    வேலூர் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் வசதி செய்யப்பட்டுள்ளது. பஸ்நிலையத்தில் 500 மின்விளக்குகள் பொருத்தி வருகின்றனர். 

    இந்த மின் விளக்குகள் பகல் நேரத்தில் சோலார் மின் உற்பத்தியில் இருந்து ஒளிரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் வேலூர் மாநகராட்சிக்கு மின் கட்டணம் பெருமளவில் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குடியாத்தம்-சித்தூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம்-சித்தூர் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை.  இந்த சாலை வழியாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா மற்றும் வட மாநிலங்களுக்குச் எப்போதும் கனரக வாகனங்கள் அதிக அளவு சென்று வருகிறது. 

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியாத்தத்தில் இருந்து பரதராமி வரை சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு பகுதிகளாக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. அதில் பெரும்பாலான சாலை பணி முடிவடைந்து விட்டது ஆனால் கல்லப்பாடி பகுதியில் உள்ள சாலை இன்னும் அமைக்காமல் உள்ளது. 

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விரைவாக சாலை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.கடந்த வாரம் பரதராமி பகுதியில் ஆய்வுக்கு வந்த கலெக்டரும் சாலையை சீரமைக்காமல் 

    இருப்பதைப் பார்த்து உடனடியாக நெடுஞ்சாலைத் துறை யினருக்கு விரைவாக சாலையை சீரமைக்குமாறு உத்தரவிட்டார்.  இருப்பினும் சாலை அமைக்கும் பணி மிகவும் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக கல்லப்பாடி பகுதியில் உள்ள சாலையை சீர் செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினர் . அப்போது அதிகாரிகள் விரைவாக சாலையை சீர் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

    இருப்பினும் கல்லப்பாடி பகுதியில் சாலை சீரமைக்காததால் நேற்று அந்த ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கல்லப்பாடி பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால் குடியாத்தத்தில் இருந்து கல்லப்பாடி பரதராமி வழியாகச் செல்லும் வாகனங்களும், ஆந்திராவிலிருந்து குடியாத்தம் வழியாகச் செல்லும் வாகனங்களும் வழிநெடுகிலும் நின்றன இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் லலிதா, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சம்பத்குமார் மற்றும் காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    விரைவாக சாலையை சீரமைக்க உறுதியளித்தனர் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஒரு மணி நேரம் இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.
    ×