என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஆரணி:

    முழு ஊரடங்கை யொட்டி ஆரணியில்   காந்தி ரோடு, எஸ்.எம். ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கபட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மேலும் ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் பழைய பஸ்நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டடனர்.

    அப்போது தடையைமீறி சுற்றி திரியும் வாகன ஓட்டிகளின் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பறிமுதல் செய்த வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து நாளை வாகனங்களை திரும்பப் பெற்று கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
    சேத்துப்பட்டில் வீடு வழங்கும் திட்டம் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் குடிசைகள் இல்லா தமிழகம் கலைஞரின் வீடு வழங்கும் திட்ட மறு கணக்கெடுப்பு 2022 வட்டார அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.

    முகாமிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளின் செயலாளர் அறவாழி தலைமை தாங்கினார். 

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் அருண், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜு.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     அனைவரையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மோகன் வரவேற்றார்.

     முகாமில் குடிசைகள் இல்லா தமிழகம் கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் 2022 திட்டம் குறித்து குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பயனாளிகளை தேர்வு செய்தல் திட்ட பணிகளை விரைந்து முடித்தல் ஆகியவை குறித்து மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு கணினி மூலம் பெரிய திரையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49ஊராட்சி மன்ற செயலாளர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கலைஞர் வீடு வழங்கும் திட்ட உதவியாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
    திருவண்ணாமலையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடிய காணப்பட்டது.
    திருவண்ணாமலை:

    முழு ஊரடங்கு இன்று அமுலில் உள்ள நிலையில் திருவண்ணாமலையில் உள்ள பல திருமண மண்டபங்களில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று பல புதுமண ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் கொரோனா பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து விட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா மூன்றாவது பரவல் அதிகரித்துள்ளது.

    எனவே விரைவில்  திருமண மண்டபங்களில் திருமணம் செய்ய தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பல குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகள் திருமணத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னதாகவே திருமணத்தை நடத்தி வருகின்றனர். 

    திருவண்ணாமலையில் இன்று 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது. 

    கொரோனா விதிமுறைகள் காரணமாக ஆடம்பரமாக நடைபெறும் திருமணங்கள் மிகவும் எளிமையாக நடைபெற்றன. உறவினர்கள் வருகையும் குறைவாகவே இருந்தது.
     
    திருவண்ணாமலையில் கடந்த வாரத்தை விட இன்று மக்கள் நடமாட்டம் ஓரளவு காணப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்று மாலையே வாங்கினர். 

    இந்த முழு ஊரடங்கு அனைத்து தரப்பினரையும் மனதளவில் பாதிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். 

    இருந்தபோதிலும் உடல் நலன் கருதி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மதித்து வீடுகளில் இருந்து வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் பூத நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 21-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

     அன்று முதல் கால பூஜை நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று (22-ந் தேதி)  காலை இரண்டாம் கால பூஜையும் .மாலை 4மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெற்றது. 

    இதைத் தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

     8 .15 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனை, 8.30 மணிக்கு கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பின்னர் 8.45 மணிக்கு விமானம் மற்றும் மூலவர்  ,பரிவார மூர்த்திகள்  விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    அப்போது அங்கு திரண்ட 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இன்று முழு ஊரடங்கு நாள் என்பதால் கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் பக்தர்களை வெளியேறச் சொல்லி வற்புறுத்தினார். 

    இதனால் 1மணிநேரத்தில்  பக்தர்கள் அனைவரும் வெளியேறினர். 
    கும்பாபிஷேக விழாவில் உபயதாரர்கள் தமிழ்ச்செல்வி, அருள்குமரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜீவானந்தம், அருணாச்சலேஸ்வரர் கோவில் கோவில் இளவரசு படம் ரமேஷ் குருக்கள், சர்வசாதகம் எம்.எஸ். செல்லப்பா பட்டாச்சாரியா, சபரிகிரீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என 25 சங்கங்கள் ஒன்றிணைந்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆரணி:

     22 ஆண்டுகளுக்கு முன்பு வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டமாக தோற்றுவிக்கபட்டு அப்போது 6 வட்டங்கள் 2 வருவாய் கோட்டங்கள் உள்ளிடக்கி இருந்தன.

    திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார், போளுர், கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம் என 8 தொகுதிகள் உள்ளிடக்கியும் தற்போது திருவண்ணாமலை ஆரணி செய்யார் என 3 வருவாய் கோட்டங்கள் 4நகராட்சி 18 ஊராட்சி ஓன்றியகள் 10 பேரூராட்சி 860 கிராம ஊராட்சி பெற்றுள்ளன இதன் பரப்பளவு சுமார் 188 கி.மீட்டர் ஆகும்.

    தற்போது தமிழகத்தில் பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம்  உள்ளது.
     
    திருவண்ணாமலை மாவட்டத்தை 2-ஆக பிரித்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கடந்த கடந்த 10 ஆண்டுகளாக ஆரணி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளன.

    ஆரணி பொருளாதாரம் தொழில் மற்றும் அடிப்படை நிர்வாக தேவைகள் அனைத்தும் கொண்டிருக்கின்றன பாராளுமன்ற தொகுதியாகவும் உள்ளது.

    ஆரணி பட்டு என்றாலே உலகளவில் பிரசித்த பெற்றவையாகவும் விளங்கி வருகின்றன. 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. 

    மாவட்டமாக அனைத்து தகுதிகளையும் பெற்ற ஆரணியை மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று பலதரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இது மட்டுமின்றி கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கபடும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

    மேலும் கடந்த 2 நாட்களாக சமூக வளைதலங்களான வாட்ஸ்-அப் பேஸ்-புக் ஆகியவ்றறில் ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்ட உருவாக்க வேண்டும் என்று இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் சமூக வளைதலங்களில் வைரலாக பரவியதன் மூலம் வியாபாரிகள் இளைஞர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் ஓன்றுணைந்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க ஓருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் ஆரணி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

    இதில் 25-க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஓன்றுணைந்து ஆரணியை தலையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மாவட்ட அமைச்சரானன பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    ஆரணி மக்களின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    திருவண்ணாமலையில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த மார்கழி மாதம் முதல் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனியின் காரணமாக மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்தியந்தல், அடி அண்ணாமலை உள்ளிட்ட கிராம மக்கள் முதலில் அதிகம் பாதிக்கப்பட்டு வந்தனர்.

     அதன் பின்னர் திருவண்ணாமலை நகர பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பனிப்பொழிவால் ஏற்படும் நோய்களுக்கு மக்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். 

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சாலைகளை பனிமூட்டம் மறைத்தது. எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

     இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். காலை 8 மணிக்கு பின்னரே பனிமூட்டம் விலகியது.அதன்பின்னர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வழக்கம் போல் சென்றனர்.

    பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள் குல்லா உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டு செல்கின்றனர். டீக்கடைகளில் மக்கள் அதிகளவில் குவிகின்றனர்.

    திருவண்ணாமலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பனிப்பொழிவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப விடாமல் செய்து வருகிறது.
    ஆரணியில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 4 நாட்கள் வங்கி மூடப்படும் என தெறிவித்துள்ளனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் சாலையில் இந்தியன் வங்கி இயங்கி வருகின்றன.

    இதில் மேலாளர் தியாகராஜன் உட்பட 13 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    மேலும் இதில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு உடல் நலம் பாதிக்கபட்டதால் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில் பெண் ஊழியர் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டன.

    மேலும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் 4 நாட்கள் வங்கி இயங்கக்கூடாது என்று மருத்துவ துறையினர் அறிவுறுத்தியதால் வங்கி இழுத்து மூடப்பட்டன.
    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கொரோனா கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது. 

    பொது மக்கள் மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் கொரோனா கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் 04175-233344, 233345, 232377 என்ற எண்களை தொடர்பு கொண்டு டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களிடம் கொரோனா தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனைகள், உதவிகளை பெற்று பயன்பெறலாம். 

    குறிப்பாக வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொலைபேசி 
    வாயிலாக டாக்டரின் ஆலோசனைகளை நேரடியாக பெற்று கொரோனா தொடர்பான பயங்கள், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 
    ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 44). இவர் கரிகாத்தூர் பகுதியில் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி பவானி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

    தம்பதிக்கு மனோஜ் (15), பிரவீன் (13) என 2 மகன்கள் உள்ளனர். சிவப்பிரகாசத்தின் தாயார் மல்லிகா இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    நேற்று சிவப்பிரகாசமும், பவானியும் வேலைக்கு சென்று விட்டனர். இவரது மகன்கள் பவானியின் தாயார் வீட்டிற்கு சென்று விட்டனர். மல்லிகா அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    பின்னர் வீடு திரும்பிய சிவப்பிரகாசம் வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவப்பிரகாசம் களம்பூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேட்டவலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேட்டவலம்:

    ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை 21-ம் தேதி வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால். 

    ராஜன்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்க்கரிப்பூர், இசுக்கழிகாட்டேரி, கோணலூர், அண்டம் பள்ளம், ஆனானந்தல், மதுராம் பட்டு, நாடழ கானந்தல், கெங்கப்பட்டு, செல்லங்குப்பம், காட்டு மலையனூர், மற்றும் பொலக்குணம், ஆகிய பகுதிகளூக்கு காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியச் செயற்பொறியாளர் (கிழக்கு) ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்காணிப்பு கேமரா-மின் கம்பங்களில் ஏறி குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் 14 கி.மீ.தூரம் அண்ணாமலையை சுற்றி வந்து கிரிவல பாதை வழிபாடு செய்வார்கள். 

    பவுர்ணமி நாட்கள் மட்டும் இன்றி சாதாரண நாட்களிலும் பக்தர்கள் 24 மணி நேரமும் கிரிவலம் செல்வார்கள். கிரிவலப்பாதையில் பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின்விளக்கு, கண்காணிப்பு காமிரா மற்றும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

    இந்தநிலையில் கிரிவலப்பாதையில் வசித்துவரும் ஏராளமான குரங்குகள் மின் கம்பங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா கம்பங்களில் ஏறி விளையாடுகின்றன. மேலும் வயர்களிலும் நடந்து செல்கின்றன. இதன் காரணமாக இணைப்புகள் சீர்குலைந்து அடிக்கடி மின் விளக்குகள் எரியாமல் பக்தர்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    மேலும் கண்காணிப்பு காமிரா செயல்படாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதால் அங்கு நடைபெறும் குற்றங்களை கண்காணிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

    இது பற்றிய தகவலை கலெக்டர் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதால் கலெக்டர் கிரிவலப்பாதையில் மின்விளக்கு இணைப்புகள் மற்றும் கண்காணிப்பு காமிரா இணைப்புகள் பூமிக்கு அடியில் கொண்டு செல்லப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்த பணி நடைபெறாமல் இருப்பதால் தொடர்ந்து இதுபோன்ற நிலைமை ஏற்படுகிறது.

    மேலும் கிரிவலப்பாதையில் அறிவிப்புகளை ஒலி பரப்பும் இணைப்புகளும் குரங்குகளால் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் எந்த அறிவிப்புகளையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கிரிவலப் பாதையில் விபத்துகளில் குரங்குகள் இறப்பதால்பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவு எதுவும் வைக்க வேண்டாம் என்று வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

    கிரிவலப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அங்குள்ள புறக்காவல் போலீஸ்நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி விரைவில் மின் கம்பங்கள் மற்றும் கண்காணிப்பு காமிரா இணைப்புகளை பூமிக்கடியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளை எல்லா உரங்களையும் வாங்க சொல்லி வற்புறுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைப்படி தேவையான உரம் பயன் படுத்த வேண்டும். மேலும் டிஏபி உரங்களுக்கு பதிலாக மணிச்சத்து எளிதில் கிடைக்கக்கூடிய சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை பயன்படுத்தலாம்.

    உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மட்டுமே வழங்கிட வேண்டும். யூரியா உரத்துடன் விவசாயிகள் விரும்பாத உரஙகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட விற்பனை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். 

    உர விற்பனை மையங்களிலும் உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை பராமரிக் கவேண்டும். உரமூட்டையில் குறிப் பிட்டுள்ள விலைக்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.

    இவற்றை முறையாக பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவதிற்கான உரங்கள் யூரியா 4,668 மெட்ரிக் டன், டிஏபி 588 மெட்ரிக் டன், பொட்டாஸ் 679 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 266 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,185 மெட்ரிக் டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவைகளை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×