என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    செய்யாறு அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் அடித்து கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவரது மனைவி தாட்சாயிணி (வயது 40) இவர்களுக்கு தமிழ்ச் செல்வன் (வயது 21), குணாளன் (வயது 19), கோகுல் (வயது 17) என 3 மகன்கள் உள்ளனர்.

    திருவண் ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதனை ராஜேந்திரன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ராஜேந்திரனும், தாட்சாயிணியும் 2 பசு மாடுகளை அழைத்து கொண்டு நிலத்திற்குச் சென்றனர். பின்னர் வேலை சம்பந்தமாக ராஜேந்திரன் அங்கிருந்து சென்று விட்டார். 

    வேலைகளை முடித்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் நிலத்திற்கு சென்றபோது அங்கு தாட்சாயிணி  இல்லாததால் மாடுகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் தாட்சாயிணி கிடைக்க வில்லை. 

    இதனால் மீண்டும் நள்ளிரவு 1 மணியளவில் நிலத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது பக்கத்து நிலத்தில் தாட்சாயிணி  காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர். 

    மர்மமான முறையில் இறந்து கிடந்த தாட்சாயிணி உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலக்டர் முருகேஷ் கொடியேற்றி நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது.

    கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், போலீசார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன . மேலும் 855 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே, 43 லட்சத்து, 69 ஆயிரத்து 308 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கீழ்பென்னாத்தூர் பகுதியில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் அறிமுகம் செய்யும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டுவரும் வகையில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. 

    தமிழகத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடுகளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. 

    அதன் அடிப்படையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையிலும், கைபைகளை உபயோகப்படுத்திடும் வகையிலும் விழிப்புணர்வு கூட்டம் ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். 

    மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், அனுராதா சுகுமார் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் அனைவரையும் வரவேற்றார். 

    துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை ஒழிப்பது குறித்தும், துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்தும் கருத்துரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார். 

    தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கொண்டு வந்த மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களிடம் மஞ்சப்பைகளை வழங்கினார். கிராமபுற மக்கள் துணிப்பை எனும் மஞ்சப்பைகளை பயன்படுத்திட வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். 
    திருவண்ணாமலை அருகே 2 ஆயிரம் அடி மலை உச்சியில் கள்ளக்காதல் ஜோடி தூக்கில் தொங்கினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அருகில் பருவத மலை உள்ளது. இங்குள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். 
     
    பருவதமலை 4,560 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மலையாகும். இங்கும் பவுர்ணமி காலங்களில் பக்தர்கள் கிரிவலம் செல் வார்கள். இந்த நிலையில் பருவத மலையில் 2000 அடி உயரத் தில் ஆடு மேய்க்கச் சென்ற வர்கள் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அங்குள்ள மரத்தில் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலாடி இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் வனத் துறையினர் உள்பட 20 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட 2 பேர் உடலையும் மீட்டனர்.  அப்போது கடும் துர்நாற் றம் வீசியது. அவர் கள் தற்கொலை செய்து 10 நாட்கள் வரை ஆகியிருக் கலாம் என்று கூறப்படு கிறது. இருவரது உடலை யும் டோலியில் கட்டி தொழி லாளர்கள் இரவு 1 மணி அளவில் கீழே கொண்டு வந்தனர். 

    பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணா மலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 2 பைகளை கைப்பற்றி சோதனை செய்த னர். அதில் இருவரது ஆதார் அட்டைகள் மற்றும் பணம் ஆகியவை இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

    இதில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் சென்னையை அடுத்துள்ள  மாடம் பாக்கம், பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மாடம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜசேகர் (வயது43) என்பதும், அவருடன் தற்கொலை செய்து கொண்ட பெண் பள்ளிக்கரணை, நாராயண புரத்தை சேர்ந்த தேவி (26) என்றும் தெரியவந்தது.

    ராஜசேகர் அச்சகம் வைத் திருப்பதும் அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததும் தெரிய வந்துள்ளது. அங்கு தேவி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இருவரது குடும் பத்திற்கும் தெரியவந்ததும் அதனை கண்டித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் மாயமாகி உள்ளனர்.

    இதுதொடர்பாக இரு வரின் குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்துள் ளனர். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.  இதில் அவர்கள் இருவரும் ஊர் ஊராக சுற்றி விட்டு புனே சென்றதும் தெரிய வந்துள்ளது.  

    கடலாடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட இருவரின் குடும்பத்துக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் இன்று அவர்கள் கடலாடி வருகின்றனர். உற வினர்களிடம் நடத்தப் படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரிய வரலாம் என்று கூறப்படுகிறது.
    போளூர் அருகே நிலத்தகராறில் அண்ணனை கல்லால் தாக்கி கொன்ற விவசாயி யும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
    போளூர்:

    போளூர் அடுத்த பொத்தரை குசால் பேட்டையைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 60). இவரது தம்பி கோவிந்தசாமி இருவரும் விவசாயிகள். 

    நிலத்தில் பங்கு பிரித்து கொடுத்ததில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கோவிந்தசாமியும் இவரது மனைவி மீனாவும் நாராயணன் வீட்டுக்கு சென்றனர். 

    வீட்டில் இருந்த நாராயணனிடம் நிலம் சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டனர். அப்போது வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் நாராயணனை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.

    ஆத்திரமடைந்த கோவிந்தசாமி கல்லால் நாராயணனை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் அடிபட்டு நாராயணன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நாராயணனை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை போளூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக கோவிந்தசாமி, மீனாவை போலீசார் கைது செய்தனர்.
    சேத்துப்பட்டு அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மோசவாடி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

    மோசவாடி ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்திமாலா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார்.அனைவரையும் ஊராட்சி செயலாளர் ராஜசேகர் வரவேற்றார்.

    கிராமசபை கூட்டத்தில் 2019&2020&ம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பில் நடைபெற்ற கசிவு நீர் குட்டை, பசுமை வீடு, மாட்டுக்கொட்டகை அமைக்கும் பணி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அம்மா விளையாட்டு மைதானம், நல்ல தண்ணீர் குளம் படிக்கட்டு அமைத்தல் ஆகிய திட்டப்பணிகள் மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பணியாளர்கள் இன் புகைப்படம் வங்கி புத்தகங்கள் சரிபார்த்தல், வருகை பதிவேடுகள் நூறு நாள் பணியாளர்கள் சம்பள கணக்குகள் குறித்து வட்டார வளஅலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையில் தேவி, மாலா, அமிர்தம் ஆகிய குழுவினர் கடந்த 5 நாட்களாக சமூக தணிக்கை செய்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. 

    கூட்டத்தில் ஊர் மூத்த குடி மக்கள் பொதுமக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் புனிதா, சூர்யா ஆகியோர் நன்றி கூறினர்.
    கண்ணமங்கலத்தில் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை போலீசார் மீட்டனர்.
    கண்ணமங்கலம்:-

    கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை சார்பில் மீன் பிடிக்க மீனவர்களின் சங்கத்தினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. 

    இந்த நிலையில் கண்ணமங்கலம் ஏரியில் பொதுமக்கள் மீன் பிடிப்பதை தடை செய்யவேண்டும் என இன்று காலை கண்ணமங்கலம் செம்படவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது48). தொழிலாளி. 

    அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். 

    இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

    மேலும் ஆரணியிலிருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ரமேஷை மீட்டனர். கண்ணமங்கலம் போலீசார் ரமேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதனால் கண்ணமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மக்களிடம் மன உளைச்சல் அதிகரித்துள்ளது.
    திருவண்ணாமலை:

    உலகில் கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு தோன்றிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்து விட்டது. அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து தொழில்களும் நலிந்துவிட்டன. 

    அத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு மக்கள் போராடிய போதிலும் கொரோனா முடிவின்றி தொடர்கிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் பாதிக்கிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மன உளைச்சல் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    75 சதவீத மக்கள் வேலைக்கு சென்றால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ளனர். உணவு தேவை நிறைவேறினாலும் மேலும் அத்தியாவசிய செலவுகள் பல உள்ளன. அவைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா பரவல் காரணமாக மாணவ&மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.வகுப்புகளில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை.  படித்துவிட்டு வேலை பார்ப்பதற்கும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியத்துககு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தில் அதிக அளவு மருத்துவச் செலவு செய்ய வேண்டியுள்ளது. 

    இதனால் மக்கள் வாழ்க்கை அழுத்தம் நிறைந்ததாக மாறிவிட்டது. வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல முடியாமல் பின் நோக்கி தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை மூடி வைத்திருப்பதால் எங்கும் செல்ல முடியாத நிலைமை தொடர்கிறது. வேலைக்காக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது பெற்றோர்களை சென்று பார்க்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. 

    கோவில்களும் வாரத்துக்கு 3 நாட்கள் மூடப்படுகின்றன. இதன் எதிரொலியாக மக்கள் மன அழுத்தத்தை குறைக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது.

    எனவே மக்கள் மன நிலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் நலனில் அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுபெறும் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 6&ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக கோவில் முழுவதும் சீரமைத்து பஞ்சவர்ணம் தீட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    இப்பணிகளை கோவிலின் செயல் அலுவலர் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலின் உதவி ஆணையர் ராமு நேரில் வந்து ஆய்வு செய்தார். 

    மேலும் ரேணுகாம்பாள் கோவிலின் முடிகாணிக்கை மண்டபம், உபகோயிலான காளியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என பணியாளர்களுக்கு ஆலோசனைகளை  வழங்கினார்.

    அப்போது கோவியில் மேலாளர் மகாதேவன், என்ஜினியர் செந்தில்குமார், எழுத்தர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
    இஞ்சிமேடு கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் கோ-பூஜை விழா நடந்தது.

    பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், லட்சுமணர், சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஆண்டாள் நாச்சியார் ஆகிய சுவாமிகளுக்கு ஸ்ரீரங்க சடகோப கைங்கர்ய சபா நிர்வாகி பாலாஜி பட்டர் வேங்கட நாதன் ஆகியோர் ஸ்தாபன திருமஞ்சனம் செய்து வைத்தனர்.

    பின்னர் 40 பசுக்களை குங்குமம். மஞ்சள். பட்டுப்புடவை. பட்டு வேஷ்டி ஆகியவை பசுக்களுக்கு சாத்துபடி செய்து கற்பூர ஆராதனை மற்றும் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

    இதில் குழந்தை பாக்கியம் திருமணதடை, பிறந்தநாள், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வணங்கிச் சென்றனர்.

    காலையில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணமாய் இருந்தனர். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டிவனம், வந்தவாசி, போளூர், ஆரணி, சேத்துப்பட்டு, செஞ்சி ஆகிய ஊர்களிலிருந்து கார் மூலமாக வந்து இந்த கோ- பூஜையில் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    திருவண்ணாமலை அருகே 13 ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த பன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் தனக்கு சொந்தமான விவசாயநிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிடடு மாலையில் பட்டியில் அடைத்து சென்றார். நேற்று காலை முத்துராமன் ஆட்டுப் பட்டிக்கு சென்றபோது அங்கு கட்டப்பட்டிருந்த 13 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. 

    அவைகளின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தன. எனவே ஓநாய் போன்ற வனவிலங்குகள் ஆடுகளை கடித்து கொன்று ரத்தத்தை குடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி முத்துராமன் கிராம நிர்வாக அலுவலர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பலியான ஆடுகளை ஆவூர் கால்நடை மருத்துவர் கவிதா  பரிசோதனை செய்தார். இதைத்தொடர்ந்து பலியான ஆடுகள் புதைக்கப்பட்டன. 

    ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எது? என்பது மர்மமாக உள்ளதால் இதுதொடர்பாக சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடியவில்லை. 

    எனவே ஆடுகளை கொல்லும்  விலங்குகளை கண்டறிந்து அவைகள் மீண்டும் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று  விவசாயிகள் தெரிவித்தனர்.
    காட்டுக்காநல்லூர் கிராமத்தில் காளைவிடும் விழாவுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் விழா முன்னிட்டு காளை விடும் திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கல் நாளிலேயே ஊரடங்கு உத்தரவு காரணமாக காளைவிடும் திருவிழா நடத்த முடியவில்லை. 

    கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் காளைவிடும் திருவிழா நேற்று 21&ந்தேதி நடத்த அனுமதி கோரி ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா, டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். 

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் 21-ந்தேதி காலை காளைவிடும் நடத்த அனுமதி வேண்டும் என அவ்வூரில் உள்ள மந்தைவெளி பஸ் நிறுத்தத்தில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் சமரசம் செய்தபின் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.
    ×