என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்த தாட்சாயிணி.
செய்யாறு அருகே வயல்வெளியில் பெண் பிணம்
செய்யாறு அருகே வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் அடித்து கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவரது மனைவி தாட்சாயிணி (வயது 40) இவர்களுக்கு தமிழ்ச் செல்வன் (வயது 21), குணாளன் (வயது 19), கோகுல் (வயது 17) என 3 மகன்கள் உள்ளனர்.
திருவண் ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதனை ராஜேந்திரன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ராஜேந்திரனும், தாட்சாயிணியும் 2 பசு மாடுகளை அழைத்து கொண்டு நிலத்திற்குச் சென்றனர். பின்னர் வேலை சம்பந்தமாக ராஜேந்திரன் அங்கிருந்து சென்று விட்டார்.
வேலைகளை முடித்துக்கொண்டு மாலை 6 மணி அளவில் நிலத்திற்கு சென்றபோது அங்கு தாட்சாயிணி இல்லாததால் மாடுகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் தாட்சாயிணி கிடைக்க வில்லை.
இதனால் மீண்டும் நள்ளிரவு 1 மணியளவில் நிலத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது பக்கத்து நிலத்தில் தாட்சாயிணி காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. செந்தில், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மர்மமான முறையில் இறந்து கிடந்த தாட்சாயிணி உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






