என் மலர்
திருவண்ணாமலை
செய்யாறு அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி விவசாயி பலியானார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 45) விவசாயி இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும் நந்தினி, சிவரஞ்சனி என்ற மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டுபெருமாள் கோவில் திருவிழாவில் காளை விடும் விழா சுமார் நடைபெற்றது.
அந்த மாடு விடும் விழாவில் 10 காளைகள் பங்கேற்றன. ஒரு காளை திடீரென்று எதிர்பாராதவிதமாக விழாவில் கலந்துகொண்ட ரகுநாதனை கொம்புகளால் குத்தியது.
பலத்த காயம் ஏற்பட்ட ரகுநாதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வெளிநாட்டு பக்தர்கள் திருவண்ணாமலையில் தங்கி இருந்து தியானம் உள்ளிட்ட ஆன்மீக கோட்பாடுகளை கடைபிடிக்கின்றனர்.
அவர்களுக்கு எங்கும் கிடையாத ஏதோ ஒரு ஆனந்தம் இங்கு கிடைக்கிறது. அதனால்தான் ஆண்டு தோறும் திருவண்ணா மலையில் தங்கி செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அனைத்து பகுதியில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை வந்து சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்று வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பலர் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி வெங்கடா சலபதி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டு வருகின்றனர்.
நேற்றும் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் இசைக்கருவிகள் வாசித்து பஜனைகள் பாடி சென்றனர். ஒரு பக்தர் ஆஞ்சநேயர் வேடமணிந்து ஆடியபடி சென்றார்.அவர்களுடன் பெண் பக்தர்களும் சென்றனர்.
அப்போது இதனை கண்ட பக்தர்கள் சிலர் பாதயாத்திரை பக்தர்கள் வைத்து இருந்த உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் என்ற இலவச வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்தது.
2021-22ம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஆவாஸ் பிளஸ் தரவுகளில் நிரந்தரக் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஓ.சி., மைனாரிட்டி, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பை சார்ந்த பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 515 வீடுகள் ஒதுக்கீடு வரப்பெற்று தகுதியான பயனாளிகளுக்கு தற்போது வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசின் பங்கு தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மாநில அரசின் மேற்கூரை நிதி மற்றும் கூடுதல் நிதி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 90 திறன்சாரா மனித சக்தி நாட்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.273 வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரத்து 570, தனிநபர் இல்லக்கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் என ஒரு வீட்டிற்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 570 வழங்கப்பட உள்ளது.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு பெற பயனாளியின் பெயர் ஆவாஸ் பிளஸ் தரவுகளில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வீடு கட்ட குறைந்தது 300 சதுர அடி சொந்த நிலம் உடையவராகவும், வேறு இடத்தில் கான்கிரீட் வீடு இல்லாதவராகவும், இதற்கு முன் அரசு திட்டங்களில் வீடு பெறாதவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகளை தேர்வு செய்தாலோ அல்லது தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கிட கையூட்டு ஏதேனும் பெற்றாலோ தொடர்புடைய அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பயனாளிகளை பரிந்துரை செய்திட மூன்றடுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எவரேனும் கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் வரப்பெற்று அப்புகார் நிருபிக்கப்படும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
ஆரணியில் போட்டோ விற்பனை கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
ஆரணி:
ஆரணி டவுன் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது40). இவர் அப்பகுதியில் போட்டோ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் இன்று காலை கடையை திறப்பதற்காக கமலக்கண்ணன் சென்றார். கடையை திறந்து உள்ளே சென்று விற்பனையில் ஈடுபட்டார்.
காலையில் உணவை முடிந்துவர அருகில் இருந்து ஓட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென்று கடையில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இத்தகவலை அறிந்து கமலக்கண்ணன் கடைக்கு ஓடிவந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.
தீ வேகமாக பரவியதால் இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கடையில் இருந்த கம்ப்யூட்டர், கேமரா, உதிரி பாகங்கள், ஆல்பம் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி டவுன் போலீசார் கமலக்கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் கல்லீரல் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குடிசைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனி (வயது58). கடந்த 30-ந்தேதி ஆரணி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் பழனி அனுமதிக்கப்பட்டார். பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர்
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் பழனியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதைத்தொடர்ந்து பழனியின் கல்லீரல் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவரது மகன் ரஞ்ஜித்குமார் பெரிய கொழப்பலூர் அரசு ஆண்கள் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மற்றொரு மகன் ரகுபதி விவசாயம் செய்து வருகிறார். தமிழ்செல்வி என்ற மகள் உள்ளார்.
திருக்குறள் குறித்து இன்றைய இளையதலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா 1,330 திருக்குறளையும் இடமிருந்து வலமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார்.
திருவண்ணாமலை:
உலக பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறள். இதனை இயற்றிய திருவள்ளுவர் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான அறிவுப்பூர்வமான கருத்துக்களை எளிய முறையில் தெரிவித்துள்ளார்.
அதனை உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருக்குறள் குறித்து இன்றைய இளையதலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா 1,330 திருக்குறளையும் வலமிருந்து இடமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார்.
இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செயல்பட்டுவரும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது.
திருமண் குரூப்ஸ் மற்றும் உதவும் கரங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. தொழில் அதிபர் கே.சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஏ.ராஜேந்திரன் கலந்துக் கொண்டுண்டு வலமிருந்து இடமாக திருக்குறளை எழுதும் சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா திருக்குறளை வலமிருந்து இடமாக எழுதி கண்ணாடியில் காண்பித்தார்.

அதில் திருக்குறள் நேராக தெரிந்தது. அப்போது அவர் இடமிருந்து வலமாக எழுதிய 1,330 திருக்குறளையும் அனைவரது பார்வைக்கும் காட்டினார். அவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த சாதனை பற்றி கல்பனா கூறியதாவது:-
இளைய தலைமுறையினரிடம் திருக்குறள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்குறளை வலமிருந்து இடமாக எழுத தொடங்கினேன்.
4.15 மணி நேரத்தில் 1,330 திருக்குறளையும் எழுதி முடித்து விட்டேன். திருக்குறள் ரத்தின சுருக்கமாக எழுதப்பட்ட அறிவு பெட்டகம். இதில் இல்லாத கருத்துக்களே கிடையாது. இந்த ஒரு நூலை படித்தால் அனைத்து நூல்களையும் படித்த அறிவை பெற்றுவிடலாம் என்றார்.
இதையும் படியுங்கள்...முதல்முறையாக ஆன்லைனில் எம்.பி.பி.எஸ். பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்ப கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், பழனிச்சாமி, மதன்மோகன், சுதாகர், ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட குழுவினர் கீழ்பென்னாத்தூர் அருகே மேக்களூர் நவநீத கோபால கிருஷ்ணசாமி கோவிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பமும், கல்வெட்டும், கீக்களூர் கோவிலில் சம்புவராயர் கால கல்வெட்டும் கண்டறிந்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்:-
மேக்களூர் கோவிலில் உள்ள யானைச்சிற்பம் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள கல்லின் மேல் பகுதியில் பாதி வட்டமாகவும் கீழ்ப்பகுதி நீளமாகவும் உள்ளது.
மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் யானையின் உருவம் தனது தும்பிக்கையை மடக்கிய நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லில் உள்ள யானையின் கீழ் யானையின் பெயரை தனியாக ஒரு வரியில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கு கீழ் 5 வரியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.
இக்கல்வெட்டைப் படித்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால், இந்த யானை சிற்பத்தின் கீழ் உள்ள கல்வெட்டில், ஸ்ரீபுத்தன் புவந திவாகரன் என்பவர் இந்த பட்டத்து யானைக்கு நீலகண்ட ரையன் என்று பெயர் கொடுத்து ள்ளான். இது 10 அல்லது 11-ம் நூற்றாண்டை சேர்ந்த தாகலாம்.
யானையின் உருவம் பொறித்து அதன் கீழ் நீலகண்ட ரையன் என்று எழுதப் பட்டுள்ளது. இது திருவண்ணாமலை பகுதியில் கிடைக்கும் அரிய வகை கல்வெட்டாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதேபோல் கீக்களூர் சிவன் கோவிலில் கருவறையின் பிற்புறம் உள்ள சுவரில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயரின் 2 நிலதானக்கல்வெட்டுகள் உள்ளன.
இக்கல்வெட்டுகள் சிமெண்ட் பூச்சுகளால் முழுமையற்று உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகளுக்கு 19 பேரும், பேரூராட்சிகளுக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை:
நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சிகளுக்கு 19 பேரும், பேரூராட்சிகளுக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், செங்கம், புதுப்பாளையம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் ஆகிய 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இவற்றில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயேட்சைகள், அரசியல் கட்சியினர் என யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.
2&-வது நாளான கடந்த 29-ந் தேதி ஆரணி நகராட்சியில் மட்டும் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். நேற்று முன்தினம் அரசு விடுமுறை நாளுக்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
நேற்று அமாவாசை என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் 3 பேரும், ஆரணி நகராட்சியில் 6 பேரும், திருவத்திபுரம் நகராட்சியில் ஒருவரும், வந்தவாசி நகராட்சி 9 பேரும் என 19 பேர் நகராட்சிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பெரமணல்லூர் பேரூராட்சியில் 2 பேரும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 2 பேரும், களம்பூர் பேரூராட்சியில் 2 பேரும், தேசூர் பேரூராட்சியில் ஒருவரும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 2 பேரும், வேட்டவலம் பேரூராட்சியில் 3 பேரும் என 12 பேர் பேரூராட்சிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மீதமுள்ள போளூர், கண்ணமங்கலம், புதுப்பாளையம், செங்கம் ஆகிய 4 பேரூராட்சிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
திருவண்ணாமலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்பினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சி மற்றும் 10 பேரூரா ட்சிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் 1,647 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் நேற்று முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இதில் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அலுவலர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக தொடர்பாக அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், உதவி கலெக்டர் வெற்றிவேல், மாவட்ட தகவலியல் அலுவலர் சிசில் இளங்கோ, மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
ஆற்காடு ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் ரூ.277.35 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ரூ.19.72 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரூ.17.91 மதிப்பில் தண்ணீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் பம்ப் அமைக்கும் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேலும் கட்டடங்களை தரமாக கட்ட வேண்டும் என்று பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து சோளிங்கர் ஒன்றியம் கேசவன்குப்பம் ஊராட்சியில் ரூ.9.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குட்டை 100 நாள் பணியாளர்களை கொண்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், ஜம்புகுளம் மற்றும் கூடலூர் ஊராட்சிகளில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டத்தில் ரூ.1.7 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணி, கூடலூர் ஊராட்சியில் பெரிய ஏரி கால்வாய் ரூ.4.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காங்க்ரீட் தடுப்பணைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அப்போது 100 நாள் வேலை பணியில் பணியாளர்கள் வேகமாக வேலை செய்யவும் 8 மணி நேரம் கட்டாயம் பணியாளர்கள் வேலை செய்வதை பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி வீடு வழங்க நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ஒன்றியம் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். பின்னர் ரூ.9.90 லட்சம் மதிப்பில் ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆர்.என்.பாளையம் ஊராட்சியில் ரூ.8.12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச் சுவர் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் நெமிலி ஒன்றியம் நெடும்புலி ஊராட்சியில் சத்தியமூர்த்தி தெருவில் ரூ.12.86 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையை ஆய்வு செய்தார்.
மேலபுலம் ஊராட்சியில் ரூ.26 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வரண்ட போர்வெல் களில் மழைநீர் சேகரிப்பு நீரை உறிஞ்சி கட்டமைக்கப்பட்டுள்ளதை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அய்யங்குளக்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை:
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அய்யங் குளக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை அமாவாசை தினம் இன்று என்பதால் ஏராளமான பொதுமக்கள் அய்யங்குளக் கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி 10-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்களை சொல்லி முன்னோர் வழிபாடுகளை செய்தனர்.
இதனால் அந்தப் பகுதி திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. முன்னோர் வழிபாட்டுக்கான பொருட்கள் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டன. முன்னோர் வழிபாட்டை செய்தபின்னர் அதே பகுதியில் அமைந்துள்ள அருணகிரிநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
முன்னோர் வழிபாடு செய்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் தரிசனம் செய்தனர். தங்களது முன்னோர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும், தங்களது குடும்பத்தில் அமை தியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதற்காகவும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதாக கூறப்படுகிறது.
கண்ணமங்கலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தொழுநோய் ஒழிப்பு தினம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் டாக்டர் கார்த்திக் தலைமை தாங்கி, காந்தியடிகள் மறைந்த நாளை உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுவது குறித்தும், தொழுநோய் பாதித்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கிக் கூறினார். டாக்டர் அனிலாராஜ் வரவேற்று பேசினார்.
தொழுநோய் பாதித்த பெண்ணுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.






