என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை நகராட்சியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் திடீரென ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    தமிழகம்  முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

    மாநில தேர்தல் ஆணையத்தால் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளராக எம்.எஸ். சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார். 

    திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 39-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ்.சங்கீதா நேரில் சென்று பார்வையிட்டு நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, வட்டார தேர்தல் பார்வையாளர் சந்திரா ஆகியோரிடம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

    தபால் வாக்கு, வாக்குசாவடி  மையம்  அமைப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். தேர்தல்  பணியில்  ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

    திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் எத்தனை வாக்குசாடிகள் உள்ளன? பதற்றமானவை எத்தனை? என்று கேட்டறிந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர், நகராட்சியில்  144  வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அதில் 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீபிரகாஷ், தேர்தல் உதவியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கொரோனா பரவல் காரணமாக எனது புதிய படங்கள் ரீலிஸ் தள்ளிச் சென்று விட்டன இன்று திருவண்ணாமலையில் நடிகர் அருண்விஜய் கூறினார்.
    திருவண்ணாமலை:

    தமிழகத் திரை உலகில் உள்ள இளம் கதாநாயகர்களில் நடிகர் அருண்விஜய் குறிப்பிடத்தக்கவர். 

    இவர் கதாநாயகன் மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து புகழ்பெற்றவர்.இவர் நடித்த சில படங்கள் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவர் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் உள்ளிட்ட ஒவ்வொரு சன்னதிக்கும் சென்று வழிபட்டார். பின்னர் தங்கக் கொடிமரம் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

    அவரைக் காண பக்தர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். சிலர் அவருடன் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொண்டனர். 

    பின்னர் நடிகர் அருண்விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    நான் நடித்த சில திரைப்படங்கள் வரிசையாக ரிலீசாக உள்ளன.கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதம் ரிலீசாக வேண்டிய படங்கள் மார்ச் மாதத்திற்கு தள்ளி சென்று விட்டன. 

    நான் எனது படங்கள் ரிலீசாகும் முன்பு அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய முடியவில்லை. 

    தற்போதுதான் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது.இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

    பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு இசை உலகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ கல்வியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 25 பேரை கலெக்டர் பாராட்டினார்.
    திருவண்ணாமலை,

    தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது.

    அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு 541 அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.படிப்பில் சேர்ந்துள்ளனர். 

    இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்கள், 20 மாணவிகள் உள்பட மொத்தம் 25 பேர் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்.

    அதில் 18 பேர் எம்.பி.பி.எஸ். மற்றும் 7 பேர் பி.டி.எஸ். படிப்பை தேர்வு செய்துள்ளனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு மதிப்பெண்ணில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜ் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 

    மேலும் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர்ந்த பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில தரவரிசையில் 5-வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெற்றோர் விவசாயம் மற்றும் கூலி தொழிலாளர்கள் என்பதும், கடுமையான வறுமை நிலையிலிருந்து பல மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர்ந்து இருப்பதும் சிறப்பானது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ள 25 மாணவ-மாணவிகளுக்கும் நேற்று கலெக்டர் அலுவலக அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வியில் சேர்ந்து உள்ள மாணவ&மாணவிகளுக்கு மருத்துவ சீருடை, ஸ்டெத்தாஸ் கோப் மற்றும் பாராட்டு சான்று, பரிசு ஆகியவற்றை கலெக்டர் முகேஷ் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மருத்துவ கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெருமையான மாணவர்களின் விருப்பமாகும். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. 

    அதற்கு காரணமான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எப்போது நன்றியோடு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராகி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார். 

    இதைத்தொடர்ந்து இணைய வழியில் நடந்த மகிழ் கணிதம் சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 9 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
    படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தில் வெளியூர் பக்தர்கள் 10 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் மகாகும்பாபிசேக விழா நாளை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது.

    இக்கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா பார்வையிட்டார். சுமார் 100 அடிக்கும் மேலாக கட்டப்பட்டுள்ள புதிய 5 நிலை ராஜகோபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

    பின்னர் கோவில் தங்கும் விடுதியில் ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

    இதில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு ராமு, போளூர் தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் தரணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோகநாதன், முன்னாள் அறங்காவலர்கள் ஆர்.வி சேகர், முத்துக்கண்ணு, காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன், போளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தக்கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உள்ளூர்பக்தர்கள், உபயதாரர்கள் உள்பட சுமார் 3000 பேருக்கு மட்டும் கலந்து கொள்ளவும், காலை 10 மணிக்குப் பின்னர் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்துள்ளனர். 

    சந்தவாசல் சாலை, வீரகோவில், அனந்தபுரம் சாலையில் போலீசார் வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, ஊராட்சி சார்பில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவும், சுகாதாரத்துறை சார்பில் கோவிட் பாதுகாப்பு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கவும் உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

    மேலும்  மின் துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. தீயணைப்பு துறை சார்பில் தயாராக 2 தீயணைப்பு வண்டிகள் கோவில் அருகே நிறுத்தப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மனுதாக்கல் முடிந்ததும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கொரோனா பரவிவரும் நிலையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

    நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. திருவண்ணாமலையில் நகர் மன்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று தி.மு.க., அ.தி.மு.க.வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல் செய்தனர். 

    சுயேச்சைகள் குறைந்த அளவில் மனு தாக்கல் செய்தனர். மாலை 4 மணி வரை வேட்பாளர்களின் வருகை அதிகமாக இருந்தது. அதன் பின்னர் சனி ஓரை என்பதால் ஒருசிலர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மட்டும் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மொத்த 1,592 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    நேற்று மனு தாக்கல் முடிந்தவுடன் திருவண்ணாமலை பகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன. அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க பணிமனைகளை திறந்து வைத்தார். 

    இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் உடனடியாக பிரசாரத்தை தொடங்கினர். அவர்கள் வீடு  வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி ஓட்டு கேட்டனர்.  வேட்பாளர்கள் பிரச்சாரம் தொடங்கியதால் திருவண்ணாமலை நகர வீதிகள் கலகலப்பாக காணப்பட்டன.

    இதே போல அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணி மனைகளை திறந்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே போட்டி நிலவுகிறது. 

    மேலும் பா.ஜ.க.மற்றும் பா.ம.க வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    தெள்ளாறு அருகே 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    தெள்ளாறு அருகே திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள பென்னாடகரம் கிராமத்தில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிலைகள் கண்டறியப்பட்டு உள்ளது. 

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம், உதயராஜா, சரவணன், விஜயன், கிருபாகரன் ஆகியோர் இணைந்து தெள்ளாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது பென்னாடகரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலின் அருகே சாலையோரம் இரு சிலைகள் இருப்பதை கண்டு ஆய்வு செய்தனர். 

    இதில் அழகான வேலைபாடுகளுடன் அமைந்த விஷ்ணு சிற்பம் மண்ணுக்குள் கால்வாசி புதைந்து உள்ள நிலையில் இருகாதுகளிலும் அழகான மகர குண்டலங்கள் அணிந்து நிமிர்ந்து நேர் கொண்ட பார்வையுடன் பெரிய கண்களும், தடித்த உதடுகளும் கொண்டு காட்சி தருகிறார்.

    மேலும் இந்த விஷ்ணு சிற்பத்திற்கு அருகே பலகை கல்லில் புடைப்பாக பிள்ளையார் சிற்பம் இருந்தது. மேலும் இவ்வூரின் ஏரிக்கரையின் வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருப்பதை கண்டு சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டதில் கொற்றவை சிற்பம் கண்டறிப்பட்டது.

    இந்த கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

    மேலும் இவ்வூரில் தவ்வை சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

    இந்த பலகை கல்லில் மாந்தன் மாந்தியுடன் அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் தவ்வை அமந்த நிலையில் அமைந்துள்ளது. 

    இது குறித்து ராஜ்பன்னீர் செல்வம் கூறுகையில்:-

    இந்த சிற்பங்களை வைத்து இவ்வூரில் பல்லவர் கால கோவில் ஒன்று கால ஓட்டத்தால் அழிந்து உள்ளதை நம்மால் அனுமானிக்க முடிகிறது. 

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த சிற்பங்களும், அதன் சிறப்பும் மகத்துவமும் அறியாமல் ஊர் மக்கள் அதனை சாலையோரமும், குப்பை மேட்டிலும் கிடத்தி வைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயம். ஊரின் தொன்மைக்கு சான்றாக உள்ள இது போன்ற சிற்பங்களை ஊர் மக்கள் முறையாக பராமரித்து பாதுகாத்திட வேண்டும் என்றார்.
    செய்யாறு அருகே வேலூர் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு டவுன் சோழன் தெருவை சேர்ந்தவர் சந்திரமவுலி (வயது 39). இவர் வேலூரில் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி செய்யாறு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று சந்திரமவுலி வேலைக்கு சென்று விட்டார். ராஜாத்தி வீட்டை பூட்டிக் கொண்டு அவரது தாய் வீடான ஆரணிக்கு சென்றுள்ளார்.

     இந்த நிலையில் வீடு திறந்து கிடப்பதாக சந்திரமவுலிக்கு போன் மூலம் தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக செய்யாருக்கு வந்தார். 

    அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது. பீரோவில் வைத்திருந்த செயின், வளையல், கம்மல் என 4  பவுன் திருடு போனது தெரிய வந்தது. 

    இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரமவுலி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பயணியர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    அதில் 161 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த 161 வாக்குச்சாவடி மையங்கள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

    வருகிற 9-ந் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் ஆரணி ஊராட்சி ஒன்றியம் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் ஆற்றுப் படுகைப் பகுதியில் நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், பனையூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கூர் கிராமத்தில் புல் வளர்த்தல், மரக்கன்றுகள் நடுதல், நீர்வரத்து கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    அப்போது திட்ட இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர் கவிதா, ஆணையாளர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 நகராட்சிகளுக்கும், 10 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் மொத்தம் 273 வார்டுகள் உள்ளன. 

    இதையொட்டி கடந்த 28-ந்தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வேட்பாளர்கள் அதிகளவில் மனுதாக்கல் செய்தனர். இதையொட்டி சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    திருவண்ணாமலை நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

    முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் வரும் போது அவர்களுடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்ற அலுவலகங்கள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று 83 பேரும், ஆரணி நகராட்சி 68 பேரும், திருவத்திபுரம் நகராட்சியில் 43 பேரும், வந்தவாசி நகராட்சியில் 70 பேரும்  வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    அதேபோல செங்கம் பேரூராட்சியில் 68பேரும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் 9 பேரும், தேசூர் பேரூராட்சியில் 24 பேரும், களம்பூர் பேரூராட்சியிர் 33 பேரும், கண்ணமங்கலம் பேரூராட்சியில் 37 பேரும், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 19 பேரும், பெரணமல்லூர் பேரூராட்சியில் 18 பேரும், போளூர் பேரூராட்சியில் 24 பேரும், புதுப்பாளையம் பேரூராட்சியில் 42 பேரும், வேட்டவலம் பேரூராட்சியில் 26 பேரும்  மனுதாக்கல் செய்தனர்.

    நேற்று ஒரேநாளில் மொத்தம் 564 பேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். இதில் பெண் வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

    தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் அதிக அளவு பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.

    இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்று காலை  வேட்பு மனுதாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர். 

    இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்பட்டன.
    ஆரணி அருகே பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம், செல்போன் திருடபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆரணி:

    ஆரணி டவுன் புதிய பஸ் நிலையத்தில்  நேற்று மாலை நேரத்தில் அனைத்து பள்ளிகள் முடிவடைந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    மேலும் ஆரணி கூடலூர் செல்லும் அரசு பஸ்சில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் முந்தியடித்து கொண்டு ஏற முயன்றனர்.

    இந்நிலையில் ஆரணி அருகே பாலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரா (வயது 58) என்பவர் தன்னுடைய பையை கையில் வைத்து பஸ்சில் ஏற முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் சந்திராவின் பையில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம்  மற்றும் செல்போனை திருடினர்.

    இதனை கண்ட அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அரசு பஸ் டிரைவர் பஸ்சை ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

    போலீசார் பஸ்சை சோதனை செய்தனர். ஆனால் பணம் மற்றும் செல்போன் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மோட்சவாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் மோட்சவாடி கிராமத்தில் தர்மராஜா கோவில் மைதானத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

    வந்தவாசி அம்பேத்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அரசு நேரடி கொள்முதல் நிலைய  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

    நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார் மேலும் 2 ஊராட்சிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் நடைபெறும் திட்டப் பணிகளுக்கான ஆணைகளை வந்தவாசி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். 

    விழாவில் பெரணமல்லூர் நகர தி.மு.க. செயலாளர் வேணி ஏழுமலை, பி.என்.அண்ணாதுரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மோட்சவாடி ஊராட்சி தி.மு.க. கிளை கழக செயலாளர் கண்ணையன் நன்றி கூறினார்.
    படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் 6-ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் நிலையில் புதிய ராஜகோபுரம் திறக்கப்பட்டது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. 64 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

    இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாகும்பாபிஷேக விழா இந்த ஆண்டு வருகிற 6-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிமுதல் மணிக்குள் நடைபெறஉள்ளது.

    இக்கும்பாபிஷேக விழாவுக்கு புதியதாக 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு, கோவில் முழுவதும் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

    மேலும் ராஜகோபுர வாசலுக்கு புதிதாக தேக்கு மரக்கதவுகள், ராஜகோபுரம் உச்சிக்கு செல்லும் படிக்கட்டுகளுடன், பஞ்சவர்ணம் தீட்டுதல் உள்பட பல்வேறு சீரமைப்புப்பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கும்பாபிஷேக விழாவின் துவக்கமாக நேற்று 2-ம்தேதி புதன்கிழமை காலை 9 மணியளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக, லட்சுமி, கோபூஜை, கஜபூஜைகளுடன், கோயில் யாணை லட்சுமிக்கு சிறப்பு பூஜையுடன் புதிய ராஜகோபுர வாசல் வழியாக பசு, யானைகளுடன் பக்தர்கள் அழைத்து வரப்பட்டனர்.

    பின்னர் மாலை 6 மணியளவில் வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம் நடைபெற்றது. இன்று 3-ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அம்மன் கோயில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் யாகசாலை அலங்காரமும், மாலை 6 மணியளவில் முதல் கால யாகபூஜைகளும் நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை 4&ந்தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜைகளும், மாலை 6 மணியளவில் மூன்றாம் கால யாகபூஜைகளும் நடக்கிறது. 

    5-ந்தேதி சனிக்கிழமை காலை விசேஷ சந்தியுடன், நான்காம் கால பூஜை, மாலை 6 மணியளவில் ஐந்தாம் கால பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 6-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் ஆறாம் கால பூஜையுடன், 7.15 மணியளவில் புதிய ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகமும், 8 மணியளவில் ரேணுகாம்பாள், சோமநாதீஸ்வரர் உள்பட பரிவாரங்கள் மஹா கும்பாபிஷேகம், தீர்ததப்பிரசாதங்கள் வழங்கப்படும்.

    மாலை 7 மணியளவில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. இக்கும்பாபிஷேக விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, .வி.எஸ் சேர்மன் வேணு சீனிவாசன் உள்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
     
    இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் மு.ஜோதிலட்சுமி, துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) க.ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×